அவுஸ்ரேலியா கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு பதவிக்கு அந்த அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வாக் ஆர்வம் காட்டி வருகிறார்.
கிரிக்கெட்டில் அவுஸ்ரேலியா முன்னணி அணியாக திகழ்ந்து வருகிறது. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக அந்த அணிக்கு பெரிய இழப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை அணிக்கெதிரான மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 0-3 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது. அதன்பின் சமீபத்தில் தென்ஆப்பிரிக்காவிற்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரையும் 0-5 என இழந்து ஒயிட்வாஷ் ஆனது.
அடுத்தடுத்து இரண்டு தொடர்களை ஒயிட்வாஷ் மூலம் இழந்ததால், அந்த அணிக்கு பெரும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது. அணி வீரர்கள் மட்டுமல்ல பயிற்சியாளர், தேர்வுக்குழுவினருக்கும் நெருக்கடி ஏற்பட்டுள்ளது.
அந்த அணியின் தேர்வுக்குழு சேர்மனாக ராட் மார்ஷ் உள்ளார். இவருடைய பதவிக்காலம் விரைவில் முடிவடைய இருக்கிறது. தற்போதைய சூழ்நிலையில் தனது பதவிக்காலத்தை நீட்டிக்க கேட்கப்போவதில்லை என்று அறிவித்துள்ளார்.
இந்நிலையில் தேர்வுக்குழுவின் தலைவருக்கான வாய்ப்பு கிடைத்தால் அதை ஏற்றுக்கொள்வேன் என்று ஸ்டீவ் வாக் கூறியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டீவ் வாக் கூறுகையில் ‘‘அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் தேர்வுக்குழு வாய்ப்பு தேடிவந்தால் அதை ஏற்றுக்கொள்வேன். ஆனால், அந்த பதவி வருவதற்கான சரியான நேரம் போன்ற ஏராளமான விஷயங்கள் உள்ளன. அவுஸ்ரேலியாவில் சிறந்த கிரிக்கெட் அறிவுகள் பெற்ற ஏராளமானவர்கள் உள்ளனர். தேர்வுக்குழு பதவி குறித்து இதுவரை என்னிடம் யாரும் பேசவில்லை. ஆனால், பதவி வந்தால் ஏற்றுக்கொள்வேன்’’ என்றார்.
ஸ்டீவ் வாக்கின் சகோதரர் மார்க் வாக் கடந்த 2014-ல் இருந்து தேர்வுக்குழு உறுப்பினர் பதவியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.