பிரபல நகைச்சுவை நடிகர் திடீர் மரணம்

கன்னட திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கிய மைக்கேல் மது உடல் நலக்குறைவு காரணமாக காலமானார்.

கன்னட திரையுலகில் பிரபல நகைச்சுவை நடிகராக விளங்கியவர் மைக்கேல் மது. இவர் ஆரம்பத்தில் நடன இயக்குனராக இருந்து, பின்னர் சிவாராஜ்குமார் கதாநாயகனாக நடித்த ஓம் படம் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார். அந்த படத்தில் அவரது நடிப்புக்கு பாராட்டுகள் கிடைத்தன. பட வாய்ப்புகளும் குவிந்தன. அதன் பிறகு ஏகே. 47, நீலாம்பரி, கஜனூரா, சூர்யவம்சா உள்ளிட்ட படங்களில் நடித்து முன்னணி நகைச்சுவை நடிகராக உயர்ந்தார். 300 படங்களுக்கு மேல் நடித்து இருக்கிறார்.

பெங்களூருவில் குடும்பத்துடன் வசித்து வந்த மைக்கேல் மதுவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மயங்கி விழுந்தார். இதையடுத்து அவரை தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி மரணம் அடைந்தார். அவருக்கு வயது 51.

கொரோனா ஊரடங்கினால் மைக்கேல் மது இறுதிச்சடங்கில் நடிகர்-நடிகைகள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இவருக்கு, மனைவியும், இரண்டு மகள்களும் உள்ளனர். கன்னட திரையுலகினர் சமூக வலைத்தளத்தில் இரங்கல் தெரிவித்தனர்.