பிரிக்கப்படாத, பிரிக்கமுடியாத ஒரே இலங்கைக்குள் தேசிய பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் காண்பதற்கான முயற்சிகளை முறியடிக்கும் உள்நோக்கத்தோடு அந்த நேர்காணில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தையும் ஒற்றுமையின்மையையும் எற்படுத்தும் நோக்கத்தோடும் அந்த நேர்காணலில் கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்திருக்கும் சுமந்திரன், வெளிப்படையாகவும் நேர்மையாகவும் செயற்பட்டுள்ளார் எனவும் கூட்டமைப்பின் தலைவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
“தேசியப் பிரச்சினைக்குத் தீர்வொன்றைக் கொண்டுவருவதற்காக அடுத்தடுத்துப் பதவிக்குவந்த ஜனாதிபதிகளான ஆர் பிரேமதாச, சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ஷ, மைத்திரிபால சிறிசேன முன்னாள் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரின் தலைமைத்துவத்தின் கீழ்; பெருமளவு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுமந்திரனிடம் கேட்கப்பட்ட கேள்விகள் சிங்கள, தமிழ் மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கம் கொண்டவையாக உள்ளன.
இப்பேட்டியின் நோக்கம் சிங்கள, தமிழ் மக்கள் ஆகிய அனைவர் மத்தியிலும் தற்போது நடைபெற்றுவரும் நடைமுறையை குழப்புவதாகும்.
அத்தகைய தீயமுயற்சிகளால் மக்கள் குழப்பமடையவும் தவறாக வழிநடத்தப்படவும் கூடாது.
தமிழர் போராட்டம் தொடங்கியபோது, அது ஜனநாயக ரீதியானதாகவும் சமாதான வழியிலானதாகவும் வன்முறையற்றதாகவுமே இருந்தது.
ஜனநாயக வழியிலானதும், சமாதானமானதும் வன்முறையற்றதுமான தமிழர் போராட்டம் தொடங்கி ஒரு 30 ஆண்டு காலப்பகுதியின் பின்னர், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் 70 களின் பிற்பகுதியிலும், 80 களின் தொடக்கத்திலும் தமது ஆயுதப் போராட்டத்தை ஆரம்பித்தனர்.
முதல் மூன்று தசாப்தங்களின்போது தமிழர் பிரச்சினைக்கு நியாயமானதொரு தீர்வுகாணப்பட்டிருப்பின், தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் ஒருபோதும் தோன்றியிருக்காது.
அகிம்சை வழியில் பற்றுறுதிகொண்டிருந்த தமிழ்த் தலைவர் செல்வநாயகத்தோடு செய்துகொள்ளப்பட்ட உடன்படிக்கைகளையும் ஒப்பந்தங்களையும்; பெரும்பான்மை இனத் தலைவர்கள் அமல்படுத்தத் தவறிமையே தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாவதற்கு வழிவகுத்தது.
2009 ஆம் ஆண்டுவரை நீடித்த ஆயுதப் போராட்டக் காலத்திலும்கூட அமைதி வழி தமிழர் போராட்டம் தொடர்ந்தது. இன்னும் தொடர்கிறது.
நீதியானதும் ஏற்றுக்கொள்ளத் தக்கதுமான தீர்வொன்றையே தனது இறுதியான ஆர்வமாகக் கொண்டுள்ள சுமந்திரன் அந்தக்கண்ணோட்டத்திலிருந்தே வினாக்களுக்கு விடையளித்துள்ளார்.
சில விடயங்கள் மீது அவர் தனது சொந்தக் கருத்துக்களையும் வெளியிட்டுள்ளார்.
கடந்த பல தசாப்தங்களாக தமிழ் மக்கள் பலவழிகளிலும் பெருமளவில் துன்பம் அனுபவித்துள்ளனர்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் தோற்றம் பெறுவதற்குமுன்னரும் தமிழ் மக்கள் இன அழிப்புக்கு ஆளாகியிருந்தனர்.
ஒருபெரும் எண்ணிக்கையிலான தமிழ் மக்கள் நாட்டை விட்டுத் தப்பியோடியுள்ளனர்.
தேசியப் பிரச்சினைக்கு ஏற்றுக்கொள்ளத்தக்கதொரு தீர்வு மாத்திரமே தமிழ் மக்களுக்கு நிரந்தர சமாதானத்தையும், நிம்மதியையும் தரும்.” எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.