தனிமைப்படுத்தும் விதியை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
திரைப்பட இயக்குனர் பாரதிராஜா சென்னையில் இருந்து கடந்த வாரம் தேனிக்கு வந்தார். கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை சிவப்பு மண்டல பகுதியாக உள்ளது. அங்கிருந்து வரும் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு 14 நாட்களுக்கு தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் சென்னையில் இருந்து தேனிக்கு வந்த இயக்குனர் பாரதிராஜாவும் தன்னை கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டார். சுகாதாரத்துறையினர் வேண்டுகோளை ஏற்று அவரும் தன்னை தனது வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார்.
இந்நிலையில் போடி அருகே முந்தல் சோதனை சாவடியில் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்ட சுகாதாரத்துறை அலுவலர் ஒருவர் தனது முகநூல் பக்கத்தில் இயக்குனர் பாரதிராஜாவுடன் இருக்கும் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். மேலும் அந்த புகைப்படத்தில், கொரோனா தடுப்பு பணியின் போது குரங்கணி சென்று திரும்பிய இயக்குனர் பாரதிராஜாவுடன் எடுத்துக் கொண்ட புகைப்படம் என்று கருத்தையும் பதிவிட்டுள்ளார்.
இந்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. தனிமைப்படுத்தும் விதிமுறையை இயக்குனர் பாரதிராஜா மீறினாரா? என்ற சர்ச்சையை இந்த புகைப்படம் உருவாக்கி உள்ளது. இதுகுறித்து தேனி அல்லிநகரம் நகராட்சி சுகாதார அலுவலர் அறிவுச்செல்வத்திடம் கேட்டபோது, “இயக்குனர் பாரதிராஜா தன்னைத்தானே வீட்டில் தனிமைப்படுத்திக் கொண்டார். ஆனால், தனிமைப்படுத்திக் கொண்ட காலக்கட்டத்தில் குரங்கணிக்கு சென்றாரா? என்பது குறித்து விசாரித்து வருகிறோம்” என்றார்.