கிரிக்கெட் பேட் தயாரிக்கும் ஆஸ்திரேலியா நிறுவனம் ஒப்பந்தத்தை மீறியதற்காக மன்னிப்பு கேட்டதால் சச்சின் தெண்டுல்கர் வழக்கை வாபஸ் பெற்றுள்ளார்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் கடந்த 2016-ம் ஆண்டு கிரிக்கெட் பேட் தயாரிக்கும் நிறுவனமான ஸ்பார்டனின் பொருட்கள் மற்றும் வீரர்கள் அணியும் ஆடைகளை பிரபலப்படுத்தும் உலகளாவிய பிரத்தியேக ஸ்பான்சர்ஷிப் ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார். 2018 செப்டம்பர் மாதம் 17-ந்தேதிக்குப் பிறகு சச்சின் ஒப்பந்தத்தை முறித்துக் கொண்டார். இருந்தாலும் சச்சின் பெயரை பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.
ஆனால் ஒப்பந்தத்தில் கூறியபடி ராயல்டி மற்றும் ஒப்புதல் கட்டணத்தை அந்த நிறுவனம் சச்சினுக்கு கொடுக்கவில்லை. பலமுறை கேட்டும் செவி சாய்க்காததால், ஆஸ்திரேலியாவின் உச்சநீதிமன்றத்தை நாடினார். சச்சின் அந்த நிறுவனம் மீது ஒப்பந்தத்தை மீறுதல், தவறாக நடத்துதல், ஏமாற்றும் நடத்தை போன்ற காரணங்களால் குறிப்பிட்டு குற்றம்சாட்டியிருந்தார்.
இந்நிலையில், ‘‘மதிப்பிற்குரிய ஒப்பந்தத்தின்படி நடந்து கொள்ள தவறிவிட்டோம், அதற்கு மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். தெண்டுல்கரின் பொறுமை பிரச்சனை முடிவதற்கு முக்கிய காரணமாக அமைந்தது. அதற்காக அவருக்கு நன்றி சொல்ல வேண்டும்’’ என ஸ்பார்டன் நிறுவனம் தெரிவித்தது. இதனால் சச்சின் தெண்டுல்கர் வழக்கை திரும்ப பெற்றுக் கொண்டார்.
Eelamurasu Australia Online News Portal