தமிழ்த் திரையுலகில் நடிப்பிற்குகாக தன்னையே வருத்திக் கொண்டு நடிக்கும் நடிகர்களில் விக்ரம் முக்கியமானவர். சிவாஜிகணேசன், கமல்ஹாசன் ஆகியோருக்குப் பிறகு நடிப்பால் பாராட்டப்படும் நடிகர்களில் விக்ரம் மட்டுமே முதன்மையானவராக இருக்கிறார். 1990ம் ஆண்டு இதே நாளில் வெளிவந்த என் காதல் கண்மணி ; படத்தின் மூலம் நாயகனாக திரையுலகத்திற்கு அறிமுகானார் விக்ரம்.
அடுத்தடுத்து ஸ்ரீதர், பி.சி.ஸ்ரீராம், விக்ரமன், பார்த்திபன் போன்ற இயக்குனர்களின் படங்களில் நடித்தும் விக்ரமால் திரையுலகில் ஒரு முன்னணி ஹீரோவாக உயர முடியவில்லை.
1999ம் ஆண்டு கடைசியில் பாலா இயக்கத்தில் வெளிவந்த சேது திரைப்படம் விக்ரமின் திரையுலக வாழ்க்கையை திருப்பிப் போட்டது. இப்படி ஒரு நடிகர் இத்தனை நாட்களாக எங்கிருந்தார் என ரசிகர்கள் சேது ; படத்தையும் விக்ரமையும் கொண்டாடினார்கள்.
அதன் பின் வெளிவந்ததில் ப டம் விக்ரமை ஒரு கமர்ஷியல் ஹீரோவாகவும் உயர்த்தியது. தொடர்ந்து “காசி, ஜெமினி, சாமுராய், கிங், தூள், காதல் சடுகுடு, சாமி, பிதாமகன், அருள், அந்நியன், மஜா, பீமா, கந்தசாமி, ராவணன், தெய்வத் திருமகள், ராஜாபாட்டை, தாண்டவம், டேவிட், ஐ, 10 எண்றதுக்குள்ள, இருமுகன்” என ஒவ்வொரு படத்திலும் விதவிதமான கதாபாத்திரங்கள் மூலம் தன்னுடைய நடிப்பைப் பற்றிப் பேச வைத்தார். குறிப்பாக “காசி, பிதாமகன், அந்நியன், தெய்வத் திருமகள், ஐ, இருமுகன்” ஆகிய படங்களில் அவர் நடிப்பைப் பாராட்டாதவர்களே இல்லை.
பிதாமகன் படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் வாங்கினார். தமிழில் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் நடித்துள்ள விக்ரம் இன்றைய வளரும் நடிகர்களுக்கும், திரையுலகில் நாயகனாக அறிமுகமாக நினைக்கும் இளைஞர்களுக்கும் சரியான முன்னுதாரணமாக இருக்கிறார்.
நாயகனாக அறிமுகமாகி 9 வருடங்கள் கழித்தே அவரால் வெற்றியைப் பார்க்க முடிந்தது. அதுவரை பொறுமையாக காத்திருந்தவரை என்னவென்று சொல்வது. உழைப்பும், முயற்சியும் இருந்தால் என்றாவது ஒரு நாள் சாதிக்கலாம் என்று சொல்வார்கள். அது விக்ரமிடம் இருந்ததால்தான் இடைவெளி விழுந்த பின்னும் இடைவிடாத வெற்றியை அவரால் இன்னமும் கொடுத்துக் கொண்டிருக்க முடிகிறது.