மவுத் வாஷ்’ எனப்படும் வாயை சுத்தப்படுத்த பயன்படும் திரவம் மனித உடலில் கொரோனா பரவலை குறைக்குமா? என்பது குறித்து ஆராய்ச்சி செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
சீனாவின் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகையே உலுக்கி வருகிறது. உலகம் முழுவதும் 44 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு பரவிய இந்த கொடிய வைரசுக்கு பலியானோர் எண்ணிக்கை 3 லட்சத்தை நெருங்கியுள்ளது.
இந்த கொடிய வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் உலகம் முழுவதும் விஞ்ஞானிகள் தீவிர முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், மவுத் வாஷ் எனப்படும் வாயை சுத்தம் செய்யப்பயன்படுத்தப்படும் திரவம் மனித உடலில் கொரோனா பரவும் வேகத்தை குறைக்க பயன்படுமா? என்பது குறித்து ஆய்வு செய்ய விஞ்ஞானிகள் முடிவு செய்துள்ளனர்.
கொரோனா இரண்டு அடுக்குகளால் உண்டானது. வெளிப்புறம் அடுக்கு கொழுப்பு படலத்தால் மூடப்பட்டு மையப்பகுதியில் வைரசை கொண்ட அமைப்பாக உள்ளது. இந்த வெளிப்புற கொழுப்பு அமைப்பு கொரோனாவுக்கு ஒரு பாதுகாப்பு அரண் போன்று விளங்குகிறது.
இதற்கிடையில், மனித உடலில் வாய் வழியாக கொரோனா வைரஸ் பரவி அது உடம்பின் மற்ற பகுதிகளுக்கும் வேகமாக பரவி விடுகிறது. தொண்டையில் சளி மற்றும் எச்சில் மூலமாகவும் வைரஸ் பரவி நுரையீரலுக்கு பாதிப்பை ஏற்படுத்தி மூச்சு விட சிரமத்தை ஏற்படுத்துகிறது.
கொரோனாவை போன்றே வாய் மூலமாக பரவும் பிற வைரஸ்களை அழிப்பதில் மவுத் வாஷ் முக்கிய பங்காற்றுகிறது. மவுத் வாஷர் மூலம் வாயை சுத்தப்படுத்துவதால் அந்த திரவம் வாயில் இருக்கும் வைரஸ் படலங்கள், பாக்டீரியாக்கள், கிருமிகளை அழித்து விடுகிறது.
இந்நிலையில், கொரோனாவை சுற்றி பாதுகாப்பு அரணாக இருக்கும் கொழுப்பு படலத்தை மவுத் வாஷ் திரவம் சேதப்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
அந்த கொழுப்பு படலம் சேதமடைந்தால் தொண்டையில் இருக்கும் வைரஸ் ஆரம்ப நிலையிலேயே செயலற்று அது மனித உடலில் மேலும் பரவும் வேகமும் குறையலாம் என விஞ்ஞானிகள் எண்ணுகின்றனர்.
இதனால், மவுத் வாஷ் திரவம் கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்துகிறதா? என்பது குறித்து உடனடியாக ஆய்வு செய்ய அறிவியல் விஞ்ஞானிகள் திட்டமிட்டுள்ளனர்.