தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன சாதித்தது?

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, மே 4ஆம் திகதியன்று, அலரி மாளிகையில் கூட்டிய முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்ன சாதித்தது?

தமிழ்த் தேசிய கூட்டமைப்பு ஒரு புறமிருக்க, அதை கூட்டிய பிரதமரோ, அரசாங்கமோ என்ன தான் சாதித்திருந்தன? கூடினார்கள், சுகாதார அதிகாரிகளும் முப்படை அதிகாரிகளும் கொவிட்- 19 தடுப்புக்காகத் தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளை விவரித்தார்கள். பலர், கொவிட்-19 தடுப்பு விடயத்தில், அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகள் தொடர்பாக, அரசாங்கத்தைப் பாராட்டினார்கள்; அவ்வளவுதான்; கலைந்து சென்றார்கள்.

அதிலிருந்து 10 நாள்கள் உருண்டோடிவிட்டன. அந்தக் கூட்டத்தில், எடுக்கப்பட்ட முடிவெனக் கூறி, ஏதாவது நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறதா? குறைந்த பட்சம், அரசாங்கத்திலோ எதிர்க்கட்சிகளிலோ, எவராவது அந்தக் கூட்டத்தைப் பற்றி, இப்போது பேசுகிறார்களா?

பிரதமர் ஏன் இந்தக் கூட்டத்தைக் கூட்டனார் என்பதை, அதன் பின்னணியை அலசிப் பார்க்கும் போது தெளிவாகிறது. மார்ச் 2ஆம் திகதியன்று, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷவால் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை, மீண்டும் கூட்ட வேண்டும் எனத் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், அரசாங்கத்துக்கு அழுத்தும் கொடுத்து வருகின்றனர். இந்த அழுத்தத்தைத் திசை திருப்புவதற்காகவே, பிரதமர் இந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்தார்.

இக்கூட்டத்தை அடுத்து, இங்கு எடுக்கப்படும் முடிவுகளை அமலாக்க, தொடர் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றதொரு நிலைமை, கூட்டத்துக்கு முன்னர் தெரியவிருக்கவில்லை. கூடிக்கலைந்து போகும் கூட்டமாகவே, அது திட்டமிடப்பட்டு இருந்தது.

அரசமைப்பின்படி, பொதுத் தேர்தலை நடத்தி, ஜூன் 2ஆம் திகதிக்கு முன்னர், புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். ஆனால், தேர்தல் ஆணையகம், அதற்குப் பிந்திய ஒரு நாளில், அதாவது ஜூன் 20ஆம் திகதி, நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதெனத் தீர்மானித்துள்ளது. இந்நிலையில், அரசமைப்பு நெருக்கடியொன்று உருவாகப் போகிறது. அதைத் தவிர்ப்பதற்காக, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும் என்பதே, எதிர்க்கட்சிகளின் வாதமாகியது.

அவசரநிலை அல்லது தேசிய ரீதியிலான நெருக்கடி நிலை உருவாயிருந்தால் மட்டுமே, ஜனாதிபதி அரசமைப்பின் 70 (7) உறுப்புரையின் கீழ், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்டலாம்.
தற்போதைய, கொவிட்-19 பரவல், அதற்குப் பொருத்தமான நெருக்கடி நிலைமையாகக் கருத முடியும். ஏனெனில், இந்தத் தொற்றைத் தடுப்பதற்கு, சுமார் 130 ஆண்டுகள் பழைய தொற்று நோய் தொடர்பான சட்டமொன்றின் கீழேயே, நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.

புதிய நிலைமைக்கு ஏற்ப, புதிய சட்டங்கள் நிறைவேற்றப்பட வேண்டும்.   அதேவேளை, வரவு-செலவுத் திட்டமொன்று நிறைவேற்றப்படாத நிலையில், அரசமைப்பின் படி ஜனாதிபதிக்குத் திரட்டிய நிதியிலிருந்து பணத்தைப் பெற அதிகாரம் இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், பொதுச் சேவைகளுக்கு அவசியமானவை எனக் கருதக்கூடிய பணத்தை மட்டுமே, ஜனாதிபதி அவ்வாறு பெற முடியும் என, அரசமைப்பின் 150 (3) உறுப்புரையில் கூறப்பட்டுள்ளது.

அதாவது, அரச ஊழியர்களுக்குச் சம்பளம் வழங்குவதற்குத் திரட்டிய நிதியத்திலிருந்து பணத்தைப் பெறலாமேயொழிய, நோய்த் தடுப்பு போன்றவற்றுக்கு, திரட்டிய நிதியத்திலிருந்து மேலதிகமாக, ஜனாதிபதி பணத்தைப் பெற முடியாது எனவும் வாதிடப்படுகிறது.

அவ்வாறு, ஜனாதிபதி பணத்தைப் பெற முடியுமாக இருந்தாலும், நீண்ட காலமாக நாடாளுமன்றத்தின் கட்டுப்பாடோ, கண்காணிப்போ இல்லாமல், ஜனாதிபதி திரட்டிய நிதியத்திலிருந்து பணத்தைப் பெற்றுச் செலவழிப்பது, நிதி சம்பந்தமான நாடாளுமன்றத்தின் அதிகாரத்தைக் கொச்சைப்படுத்துவதற்குச் சமமாகும்.

இதுவும், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்பதற்கு, மற்றொரு காரணமாக, எதிர்க்கட்சிகள் முன்வைக்கின்றன. தற்போதைய, அரசமைப்பு நெருக்கடி உருவாகும் வகையில், தேர்தல் ஆணையகம் ஜூன் 20ஆம் திகதி பொதுத் தேர்தலை நடத்துவதென முடிவு செய்ததன் காரணமாக, நாடாளுமன்றத்தைக் கலைப்பதற்காக ஜனாதிபதி மார்ச் 2ஆம் திகதி வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல், செல்லுபடி அற்றதாகிவிட்டுள்ளதாக, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளரான எம்.ஏ. சுமந்திரன் கூறியிருந்தார். அதுவும் கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்பதற்கான, மற்றொரு வாதமாகும்.

ஆனால், “பழைய நாடாளுமன்றத்தைக் கூட்டவே மாட்டேன்” என்று ஜனாதிபதி பிடிவாதமாக இருக்கும் நிலையில்தான், பிரதமர், 4ஆம் திகதிய கூட்டத்தை அறிவித்தார். எதிர்க்கட்சிகளின் கோரிக்கைக்கு, மாற்று ஏற்பாடாகவே அது கூட்டப்படுகிறது என்பது தெளிவாகியது.

தாம், இதில் கலந்துகொள்வதா, இல்லையா என்பதைப் பற்றி, ஆரம்பத்தில் எவ்வித முடிவையும் அறிவிக்காத தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, இறுதியில் தாம் அதில் கலந்துகொள்வதென்று அறிவித்தது. அதற்கான காரணத்தையும், நீண்டதோர் அறிக்கை மூலம் அறிவித்தது.

ஆனால், தற்போதைய சூழலுக்கும் இந்தக் கூட்டத்தின் நோக்கத்துக்கும், அந்த அறிக்கை எவ்வளவு பொருந்துகிறது என்பது கேள்விக்குறியாகும். கொவிட்-19 தொற்று மட்டுமல்லாது, முக்கியப் பிரதான அரசியல் காரணங்களையும் அரசாங்கத்தினதும் கூட்டத்தில் கலந்துகொண்டோரினதும் கவனத்துக்குக் கொண்டு வருவதே, கூட்டத்தில் தாம் அதில் கலந்துகொள்வதன் நோக்கமாகும் என, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அந்த அறிக்கை மூலம் கூறுகிறது.

அந்த அறிக்கையின்படி, கொரோனா வைரஸ் பிரச்சினைக்குப் புறம்பாக, நிறைவேற்று ஜனாதிபதி முறை, தேர்தல் முறை சீர்திருத்தம், இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணுதல் ஆகியவற்றையே தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, அரசாங்கத்தினதும் ஏனையோரினதும் கவனத்துக்கு கொண்டுவர முயற்சித்தது.

அந்த விடயங்கள் தொடர்பாக, முறையான தீர்வுகளைக் காண்பதற்காக, கடந்த அரசாங்கம் நாடாளுமன்றத்தை அரசமைப்புச் சபையாக மாற்றிச் செயற்பட்டமையும், அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தற்போதைய நிலையில், அவசர பிரச்சினைகளைப் பற்றிக் கலந்துரையாடுவதற்காகவெனக் கூட்டப்படும் ஒரு கூட்டத்தில், நிறைவேற்று ஜனாதிபதி முறையைப் பற்றியோ, தேர்தல் முறை சீர்திருத்தம் பற்றியோ அல்லது இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண்பதைப் பற்றியோ, ஒருவர் பேசினால், நிலைமை எவ்வாறு இருக்கும்? இந்த விடயங்கள், தீர்வு தேட வேண்டிய விடயங்கள் என்பதில் எவ்வித கருத்து வேறுபாடும் இருக்க முடியாது. ஆனால், கூட்டப்படும் சகல கூட்டங்களிலும் அவற்றைப் பற்றிப் பேச முடியுமா என்பதே, இங்கு எழும் கேள்வியாகும்.

ஆனால், கூட்டமைப்பு அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதில், எவ்வித நன்மையும் இல்லை என்று கூற முடியாது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பு என்றால், தீண்டத் தகாத ஓர் அரசியல் குழுவாகவே, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவும் அதனுடன் தொடர்புள்ள அரசியல் குழுக்களும் கருதுகின்றன.

கொவிட்-19 தொற்றாளர் தொட்ட இடமெல்லாம், கொரோனா வைரஸ் பரவுவதைப் போல், கூட்டமைப்பு தொட்ட இடமெல்லாம், பிரிவினைவாதம் பரவுவதாகவே அவர்கள், பிரசாரம் செய்கிறார்கள்.

அதன் அடிப்படையிலேயே, கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தை மீண்டும் கூட்ட வேண்டும் என்ற கோரிக்கையை, சுமந்திரன் ஆதரித்துப் பேசியதைப் பாவித்து, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சேர்ந்த சில பிக்குகள், அந்தக் கோரிக்கையைப் பிரிவினைவாதக் கோரிக்கையாகச் சித்திரித்தார்கள்.

எனினும், பிரதமர் கூட்டிய கூட்டத்தில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கலந்துகொண்டதைப் பற்றி, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஆதரிக்கும் ஊடகங்கள் பாராட்டிக் கருத்து வெளியிட்டு இருந்தன. இதன் மூலம், அவர்களது இரட்டை வேடம் அம்பலமாகிறது. அதுவே, தமிழ்த் தேசிய கூட்டமைப்பு, செய்த நன்மையாகும்.

இதுபோன்ற காரணங்களால், இதுவரை கொரோனா வைரஸ், உள்நாட்டில் மட்டுமன்றி உலகெங்கும் சகல விடயங்களையும் மூடி மறைத்துக் கொண்டு இருந்த நிலை, உள்நாட்டிலாவது மாறி வருகிறது.

கொரோனா வைரஸை, அரசியல் காரணங்கள் படிப்படியாக மூடி மறைத்துக் கொண்டு வருகின்றன. கொவிட்-19, இதுவரை நாட்டில், பாரியளவில் பரவாதிருப்பதும் அந்தத் தொற்றைப் பற்றிய செய்திகள், நாளுக்கு நாள் ஒன்றிரண்டாக அதிகரிக்கும் வெறும் புள்ளிவிவரமாக இருப்பதும், அரசாங்கம் வைரஸ் பிரச்சினையைப் பாவித்துத் தடையின்றி அரசியல் இலாபம் அடைந்து வருவதும், இந்த மாற்றத்துக்குக் காரணமாகும்.

உண்மையிலேயே, இலங்கையில், கொவிட்-19 தடுப்புப் பணிகள், வேறு பல நாடுகளோடு ஒப்பிட்டுப் பார்க்கையில், வெற்றிகரமாகவே நடைபெற்று வருகின்றன. இலங்கை ஒரு தீவாக இருப்பதும், இந்த வெற்றிக்குக் காரணமாகும். இலங்கைக்கும் வேறு நாடுகளுக்கும் இடையே தரைவழி எல்லைகள் இல்லை. வெளிநாடுகளில் இருந்து வருவோர், கட்டாயம் கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாகவே வர வேண்டும். யாழ்ப்பாணம், மத்தள விமான நிலையங்கள் முடங்கியே கிடக்கின்றன. எனவே, வெளிநாடுகளிலிருந்து வருவோரைக் கண்காணிப்பது, இலங்கையில் மிகவும் இலேசான காரியமாக இருக்கிறது.

அதேவேளை, சீனாவில் ஆரம்பித்தாலும், ஐரோப்பிய நாடுகளுக்கும் பின்னரே, இலங்கையில் பரவ ஆரம்பித்தது. இதன் காரணமாக, பல நாடுகளின் அனுபவங்களை இலங்கையின் சுகாதார அமைச்சு திரட்டிக் கொண்டிருந்த நிலையிலேயே, இந்த வைரஸ் தொற்று, மார்ச் முற்பகுதியில், நாட்டுக்குள் வந்தது. தனிமைப்படுத்தல், சுய தனிமைப்படுத்தல், முகக்கவசப் பாவனை, சமூக விலகல் (social distancing), அடிக்கடி கை கழுவுதல் போன்ற உத்திகளை உலகம் ஏற்கெனவே நடைமுறைப்படுத்தியிருந்தது.

அமெரிக்க அரசாங்கத்தோடு ஒப்பிடும் போது, இலங்கை அரசாங்கம் இந்த அனுபவங்களை நன்றாக உபயோகித்தது. அதற்காக ஊடகங்களையும் சிறந்த முறையில் பாவித்தது.

பெரும்பாலான ஊடகங்கள், அரச சார்பானவையாக இருப்பதும் அதற்குப் பெரிதும் உதவியது. அத்தோடு, ஜனாதிபதிக்கு எதற்கும் முப்படைகளே ஞாபகம் வருவதால், நோய்த் தொற்றிவர்களுடன் தொடர்பு கொண்டவர்களைக் கண்டுபிடிக்க, அரசாங்கம் முப்படைகளையும் பொலிஸாரையும் பாவித்தது.

உலகில் மிகச் சில நாடுகளே, ஆயுதப் படைகளைத் தனிமைப்படுத்தல் பணிகளுக்காகப் பாவித்துள்ளன. இதுவும் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இது வேறு அபாயங்களை உருவாக்கும் என்பது வேறு விடயம்.

எவ்வாறாயினும், அரசாங்கம் சிறந்த முறையில் நோயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து இருக்கிறது என்பது உண்மை. அரசாங்கம், அதைச் சந்தைப்படுத்த முயற்சிக்காவிட்டாலும், மக்கள் மத்தியில் அந்த அபிப்பிராயம் உருவாவது நியாயமே.

எனவே, அரசாங்கம் முயலாவிட்டாலும், இந்த வெற்றியின் மூலம், அரசாங்கத்துக்கு இயல்பாகவே அரசியல் இலாபம் கிடைக்கத்தான் போகிறது. ஆனால், மக்கள் மத்தியில் உருவாகியிருக்கும் இந்த அபிப்பிராயத்தை, அரசாங்கம், அரச சார்பு ஊடகங்கள் மூலம், மிகச் சிறந்த முறையில் தமது அரசியலுக்காகப் பாவிக்கிறது.

இதுவே, ‘லொக் டவுன்’ நிலையில் இருந்த, எதிர்க்கட்சிகளை உசுப்பிவிட்டது. முதலில், வெறும் கோரிக்கைகளை விடுத்துக் கொண்டு இருந்த அக்கட்சிகள், இப்போது நீதிமன்றத்தை அணுகியிருக்கின்றன.

தற்போதைய அரசமைப்பு நெருக்கடியை எதிர்கொள்வது எவ்வாறு? என்பதைப் பற்றி, உயர் நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்டு அறியுமாறு, தேர்தல் ஆணைக்குழுவின் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய, மார்ச் 31ஆம் திகதியன்று, ஜனாதிபதியைக் கேட்டுக்கொண்டார்.

ஏப்ரல் 4ஆம் திகதி, அதற்குப் பதிலளித்த ஜனாதிபதியின் செயலாளர் பி.பி. ஜயசுந்தர, “மே 28ஆம் திகதிக்கு முன்னர், தேர்தலை நடத்த முடியாது என, இப்போதே கூற முடியாது” எனப் பதில் அளித்து இருந்தார். இது, மே 28ஆம் திகதி, தேர்தலை நடத்த வேண்டும் எனச் சூசகமாகக் கூறுவதற்குச் சமமாகும்.

இந்த நிலையில், தாமே உயர்நீதிமன்றத்தின் கருத்தை அறிவதென, எதிர்க்கட்சிகள் முடிவு செய்தன. ஆனால், ஜனாதிபதி அல்லாதவர்கள், அடிப்படை உரிமை மீறல் தொடர்பான மனுக்கள் மூலமே, இந்த விடயத்தை உயர்நீதிமன்றத்துக்கு எடுத்துச் செல்ல முடியும்.

-எம்.எஸ்.எம். ஐயூப்