நியூசிலாந்து: மே 14-ம் திகதி முதல் உணவு விடுதிகள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் இயங்க அனுமதி

நியூசிலாந்தில் வரும் 14-ம் தேதி முதல் மால்கள், திரையரங்குகள், கஃபேக்கள், உடற்பயிற்சி நிலையங்கள் ஆகியவை திறக்கப்படும் என்று அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆதர்ன் கூறும்போது, “ஊரடங்குத் தளர்வு அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்துள்ளது. உணவு விடுதிகள், கஃபேக்கள், திரையரங்குகள், உடற்பயிற்சி நிலையங்கள் வியாழக்கிழமை முதல் திறக்கப்பட உள்ளன. பள்ளிக் கூடங்கள் அடுத்த வாரம் திங்கட்கிழமை முதல் திறக்கப்படுகின்றன.

மதுபான விடுதிகள் மே 21 ஆம் தேதி திறக்கப்படும். பொதுமக்கள் 10 பேர் மட்டுமே கூடுவதற்கு அனுமதி அளிக்கப்படும். தொழில் நிறுவனங்களைத் திறப்பதற்கு இன்னும் காலம் இருக்கிறது. விரைவில் பொருளாதாரம் மீட்டெடுக்கப்படும்” என்றார்.

நியூசிலாந்தில் சுமார் 1,147 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட, 1386 பேர் குணமாகியுள்ளனர். 21 பேர் பலியாகியுள்ளனர்.

நியூசிலாந்தில் கரோனா தொற்று ஆரம்பத்தில் தீவிரமாக இருந்தது. இதனைத் தொடர்ந்து பிரதமர் ஜெசிந்தாவின் தீவிர மற்றும் ஆக்கபூர்வமான நடவடிக்கைகள் காரணமாக நியூசிலாந்தில் கரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. இதன் காரணமாக நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா உலக நாடுகளால் பாராட்டப்பட்டார்.

உலகம் முழுவதும் கரோனா வைரஸுக்கு 41,02,849 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் 2,82,719 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 14,93,490 பேர் குணமடைந்துள்ளனர்.