கோத்தா கிங்கா? கிம்மா?

இலங்கை அரசியலில், ராஜபக்‌ஷ குடும்பம் மீண்டும் முழுமையான ஆதிக்கத்தைச் செலுத்திக் கொண்டிருக்கிறது.

கொரோனா வைரஸ் தொற்றை அடுத்து, சிறப்புச் செயலணியின் விசேட தூதுவராக பசில் ராஜபக்‌ஷ நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, 2015ஆம் ஆண்டு வரை ராஜபக்‌ஷ குடும்பம் எந்தளவுக்கு அதிகாரத்தில் இருந்ததோ, அதைவிடக் கூடுதல் ஆதிக்கத்தைப் பெற்றிருக்கிறது.

இப்போது, ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்‌ஷவும் பிரதமராக மஹிந்த ராஜபக்‌ஷவும் அமைச்சராக சமல் ராஜபக்‌ஷவும் பதவிவகிக்கையில் இவர்களுடன் பசில் ராஜபக்‌ஷவும் இணைந்திருக்கிறார்.

இதையடுத்து, குடும்ப ஆதிக்கம் தலைதூக்கியிருகிறது என்ற பொதுவான குற்றச்சாட்டுகளைக் கண்டுகொள்ளாமல், ஆட்சியை வலுப்படுத்துவதில் இறங்கியிருக்கிறது ராஜபக்‌ஷ தரப்பு.

எல்லாமுமாகத் தாங்களே இருக்க வேண்டும் என்பதே, ராஜபக்‌ஷவினரின் பொதுவான ஒரு குணாம்சம் ஆகும்.

“திருமண வீடு என்றால், தானே மணமகனாக இருக்க வேண்டும்; சாவு வீடு என்றால், தானே பிணமாக இருக்க வேண்டும்” எனத் திரைப்படம் ஒன்றில், வில்லனாக நடித்த நெப்போலியன் கூறும் வசனம் மிகப் பிரபலம். அதுபோலத் தான், ராஜபக்‌ஷவினரின் நிலைப்பாடும்.

இலங்கையின் அதிகார மய்யம் முழுவதையும், தமது கைக்குள் வைத்திருக்க வேண்டும் என்பதும், எல்லா முக்கியத்துவமும் தமக்கே கிடைக்க வேண்டும் என்பதும், அவர்களின் எதிர்பார்ப்பு.

இவ்வாறான கருத்துடைய ஒருவர் தான், வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்.

உலகம் முழுவதும், கொரோனா வைரஸ் உயிரிழப்புகள், தொற்றுகள் பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்த நிலையில், கிட்டத்தட்ட இரண்டு வாரங்களுக்கு மேலாக, ஊடகங்களின் கவனத்தைத் தன் பக்கமே முழுமையாக ஈர்த்து வைத்திருந்தார் வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங் உன்.

அதுபோலவே, கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில், நாடாளுமன்றத் தேர்தலை நடத்திக் காட்டி, தனது பங்குக்குச் சர்வதேச கவனத்தை ஈர்த்திருந்தது தென்கொரியா.

1945ஆம் ஆண்டு வரை, இந்த இரண்டு நாடுகளும் ஒரே கொரியாவாகத் தான் இருந்தன.

இரண்டாம் உலகப் போர் முடியும் வரை, ஜப்பானின் வசமிருந்த கொரியாவை, ஜப்பான் சரணடைந்த பின்னர், அமெரிக்காவும் ரஷ்யாவும் சேர்ந்து, இரண்டு துண்டுகளாகப் பிரித்து விட்டன.

இப்போது, கொரோனா வைரஸ் பீதிக்கு மத்தியில், தேர்தலை நடத்தி, உச்ச ஜனநாயகம் தமது நாட்டில் இருப்பதாக வெளிக்காட்டியிருக்கிறது தென்கொரியா.

மறுபுறத்தில், வடகொரியாவோ தனது கோட்டைக்குள் கொரோனா வைரஸ் எட்டிப் பார்க்கவில்லை என்று, எல்லா நாடுகளின் கவனத்தையும் தன் பக்கம் இழுத்திருக்கிறது.

வடகொரியாதான், உலகில் இரும்புத் திரை கொண்ட ஒரே நாடு என்ற நிலையில் இப்போது இருக்கிறது.

இறுக்கமான இஸ்லாமிய ஆட்சி நடக்கின்ற ஈரான் போன்ற நாடுகள் இருந்தாலும், இன்னமும் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட கியூபா, சீனா போன்ற கொம்யூனிச ஆட்சி நிலவுகின்ற நாடுகள் இருந்தாலும், வடகொரியா மட்டும் தான், எல்லா நாடுகளையும் விட அதிகம் மூடப்பட்ட தேசமாக இருந்து வருகிறது.

அங்கு என்ன நடக்கிறது என்ற சரியான தகவல்கள் எப்போதும் வெளியாவதில்லை. ஒன்றில் நடப்பதை விடக் குறைவான தகவல்களையே, வடகொரிய அரசு ஊடகங்கள் வெளிப்படுத்துகின்றன; அல்லது, நடப்பதை விட மிகையான தகவல்களை, வடகொரிய அரசுக்கு எதிரான ஊடகங்கள் பிரசாரப்படுத்துகின்றன.

இந்த இரண்டுக்கும் நடுவே உண்மை தெரியாமல், இரண்டு தரப்பும் அவ்வப்போது கொடுக்கின்ற தகவல்களை உள்வாங்கிக் கொண்டு போவதே, பெரும்பாலானவர்களின் பழக்கமாகி விட்டது.

அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு, சிம்மசொப்பனமாக அணு ஆயுத வல்லமையுடன், வேறு பல ஆயுதங்களுடன் வடகொரியா இன்னமும், கொம்யூனிச அரசாக நிலைத்து நிற்கிறது.

வடகொரியாவைப் பணிய வைக்கவும் அதன் ஆற்றலை அழிக்கவும் அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்ட எல்லா முயற்சிகளிலும் தோல்வியே மிஞ்சியிருக்கிறது.

இவ்வாறான ஓர் இரும்புப் பிடி அரசாங்கத்தின் தலைவராக இருக்கும், கிம் ஜொன் உன், கடைசியாக ஏப்ரல் 12ஆம் திகதி, பொதுவெளியில் காணப்பட்டார்.

அதற்குப் பின்னர், ஏப்ரல் 15ஆம் திகதி நடந்த வடகொரிய நிறுவுநரான, கிம் இல் சங்கின் பிறந்தநாள் நிகழ்வில், அவர் பங்கேற்காததை அடுத்தே, அவரைப் பற்றிய வதந்திகள் பரவத் தொடங்கின.

மாரடைப்பு வந்து கோமா நிலையில் இருக்கிறார் என்றது ஒரு தகவல்; இருதய சத்திரசிகிச்சையில் மருத்துவர் கை நடுங்கியதால், இறந்து போய் விட்டார் என்றது இன்னொரு தகவல்.

இப்படிக் கிளைக் கதைகள் பல உலாவிக் கொண்டிருந்தன.

எல்லாக் கதைகளினதும் ஒரே சாரமாக இருந்தது, வடகொரியத் தலைவர் கிம் இறந்து விட்டார்; அல்லது, இறக்கும் நிலையில் இருக்கிறார் என்பதுதான்.

மிகப் பெரிய இறுதி ஊர்வலத்துக்கு ஏற்பாடுகள் நடப்பதாகச் செய்மதிகள் படங்களைக் காட்டுவதாகவும் கதை கட்டப்பட்டது.

வடகொரியாவின் புதிய தலைவராக யார் வருவார்? அவரது சகோதரியை வடகொரியர்கள் ஏற்பார்களா என்று கேள்விகளும் எழுப்பப்பட்டன.

கிட்டத்தட்ட ஏப்ரல் 15 தொடக்கம் மே 1 வரையான காலத்தில், கிம் ஜொங் உன்னுக்கு என்னவாயிற்று, அடுத்தது யார் என்ற கேள்விகளைத் தான் எல்லா ஊடகங்களும் எழுப்பிக் கொண்டிருந்தன.

ஆனாலும், வடகொரிய விடயத்தில் எப்போதும் உணர்ச்சி வசப்படும் இரண்டு நாடுகள், இந்தமுறை அடக்கி வாசித்துக் கொண்டிருந்தன என்பதுதான் ஆச்சரியம்.

ஒன்று அமெரிக்கா; இன்னொன்று தென்கொரியா.

கிம் ஜொங் உன் பற்றி வந்து கொண்டிருந்த செய்திகளை அமெரிக்கா உறுதிப்படுத்தவில்லை; அமைதியாக இருந்தது.

தென்கொரியாவோ, கிம் நலத்துடனேயே இருக்கிறார்; அவருக்கு ஏதும் நடந்தது போல, வடகொரியாவில் பதற்றம் எதையும் காணமுடியவில்லை என்று கூறியது.

இதுதான், பலரும் இந்தச் செய்தியை நம்ப மறுத்ததற்கு முக்கியக் காரணம்.

எவ்வாறாயினும், கொரோனாவுக்கு மத்தியில் உலகமே தேடிக் கொண்டிருந்த, வடகொரியத் தலைவர் கிம், கடைசியாக எல்லா வதந்திகளுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக, மே தினத்தன்று பியொங்யொங்கில் ஒரு பாரிய உரத் தொழிற்சாலையைத் திறந்து வைக்கும் நிகழ்வில் பங்கேற்றார்.

அந்த நிகழ்வு பற்றிய படங்களை வெளியிட்டு, உலகத்தின் வாயை மூடியது வடகொரியா.

ஏற்கெனவே, இதுபோன்று கிம் ஜொங் உன், 40 நாள்கள் வெளியே வராமல் காணாமல் போயிருந்தார். அப்போதும் இதே பரபரப்புத்தான். இப்போதும் அவ்வாறே நடந்திருக்கிறது.

இது, தற்செயலானதா அல்லது திடடமிட்ட ஒன்றா என்ற கேள்வி இருக்கிறது.

தன்னைப்பற்றி, உலகம் எப்படி நினைத்துக் கொண்டிருக்கிறது, தனக்கு ஒன்று நடந்தால் உலகம் எவ்வாறு நடந்து கொள்ளும் என்பதைக் கண்டறிவதற்கான ஒரு களமாகவே, கிம் இதனைப் பயன்படுத்தியிருக்கலாம் என்றொரு சந்தேகமும் உள்ளது.

வடகொரியாவில், கிம் ஜொன் உன்தான் எல்லாமுமாக இருக்கிறார்; எல்லாமுமாக இருக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

எனவே அவர், தன்னைப் பற்றிய நேர்மறையான செய்திகளை மாத்திரமன்றி, எதிர்மறையான செய்திகளின் தாக்கங்களையும் கூட, உன்னிப்பாகக் கவனிக்கிறார் போலவே தெரிகிறது.

அதுபோலத் தான், அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பும்.

எல்லோருடைய கவனமும், தன் மீதே இருக்க வேண்டும் என்று விரும்புகின்ற மற்றொருவர் அவர்.

அவரது நடத்தைகள், பேச்சுகள், கருத்துகள் ஓரிரு முறை என்றில்லை, எப்போதுமே சர்ச்சைக்குரியவைகளாகத் தான் இருந்து வருகின்றன.

அண்மையில், கொரோனா வைரஸை ஒழிக்க, கிருமிநாசினியை ஊசி மூலம் செலுத்தலாம் என்று ஆலோசனை கூறியவர் தான் ட்ரம்ப். பின்னர், அதை விளையாட்டாகச் சொன்னதாகச் சமாளித்துக் கொண்டார்.

சில வேளைகளில், கோமாளித்தனமாகவும் பல சந்தர்ப்பங்களில் கடும்போக்காளராகவும் அவர் காணப்பட்டுள்ளார்.

ட்ரம்பை ஒத்த சுபாவம் கொண்ட ஒரு தலைவராக, வடகொரியாவின் தலைவர் கிம் ஜொன் உன் தான் இருக்கிறார்.

இவர்கள் இருவருக்கும் பல ஒற்றுமைகளும் இருக்கின்றன; உறவுகளும் இருக்கின்றன.

அமெரிக்க ஜனாதிபதிகளிலேயே, வடகொரியாவின் தலைவருடன் அதிகளவில் சந்தித்துக் கலந்துரையாடியவர் ட்ரம்ப்தான். மூன்று முறை இருவரும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள்; கடிதப் பரிமாற்றங்களும் இடம்பெற்றிருக்கின்றன.

இவர்களைப் போலவே, இலங்கை அரசியலிலும் ராஜபக்‌ஷ குடும்ப ஆதிக்கம் காணப்படுகிறது.

இந்தக் குடும்ப ஆதிக்கத்துக்கு முடிவுகட்டப் போவதாக அவ்வப்போது சபதம் போடும், பிரதான எதிர்க்கட்சி, அதனை மறந்து விட்டுத் தமக்குள் சண்டை போட்டுக் கொண்டிருக்கிறது.

இவ்வாறான ஒரு நிலையில், இலங்கையிலும் கிம், ட்ரம்ப் போன்றவர்களை முன்னுதாரணமாகக் கடைப்பிடிக்கும் தலைமைத்துவம், இன்னும் வலிமையாகத் தலைதூக்குவதைத் தடுக்க முடியாது.

-கே. சஞ்சயன்