ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு கொரோனா வைரசுக்கு ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை பலியாவார்கள் என்று உலக சுகாதார நிறுவனம் கணித்துள்ளது.
உலக சுகாதார நிறுவனத்தின் ஆப்பிரிக்காவுக்கான பிராந்திய அலுவலகம், ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறித்து ஒரு ஆய்வு நடத்தியது. அதன் முடிவுகளை ஒரு அறிக்கையாக வெளியிட்டுள்ளது.
அதில் கூறப்பட்டு இருப்பதாவது:-
மற்ற உலக நாடுகளைப் போல், ஆப்பிரிக்காவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவ வாய்ப்பில்லை. அபாய பகுதிகளில் மட்டும் படிப்படியாக பரவும்.
அந்த வகையில், தடுப்பு நடவடிக்கைகள் தோல்வி அடைந்தால், ஆப்பிரிக்காவில் இந்த ஆண்டு 83 ஆயிரம் பேர் முதல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் வரை பலியாவார்கள். 2 கோடியே 90 லட்சம் பேர் முதல் 4 கோடியே 40 லட்சம் பேர் வரை பாதிக்கப்படுவார்கள்.
தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், இன்னும் பல ஆண்டுகளுக்கு அன்றாட வாழ்க்கையில் ஒரு அங்கமாக கொரோனா உருவெடுத்து விடும்.
எனவே, பரிசோதனை, தொடர்புகளை கண்டறிதல், தனிமைப்படுத்தல், சிகிச்சை போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.