பத்திரிகையாளரும் சமூகச் செயற்பாட்டாளருமான ஐடா பி.வெல்ஸ் இறந்து 89 ஆண்டுகளுக்குப் பிறகு அவரது இதழியல் பங்களிப்புக்கான புலிட்சர் சிறப்புப் பரிசு இந்த ஆண்டு அறிவிக்கப்பட்டுள்ளது. சினிமாவுக்கு ஆஸ்கர் விருது; இலக்கியம், பொருளாதாரம், அறிவியல் துறைகளுக்கு நோபல் பரிசு போல இதழியல் துறையின் மதிப்புக்குரிய விருதுகளில் புலிட்சர் பரிசும் ஒன்று. நாடகம், இசை உள்ளிட்ட துறைகளுக்கும் சேர்த்து மொத்தம் 22 பரிசுகள் வழங்கப்பட்டாலும் பத்திரிகைத் துறை பங்களிப்புக்கான விருது சர்வதேச கவனத்தைப் பெறுவது வழக்கம்.
ஆப்பிரிக்க அமெரிக்கர்களைக் கண்மூடித்தனமாக கொன்று குவித்த நாட்களில் அந்தக் கொடுமைகளை எதிர்த்து துணிச்சலான செய்திக் கட்டுரைகளை எழுதியவர் ஐடா பி.வெல்ஸ். 1862-ல் மிஸிஸிப்பியில் அடிமைமுறைக்கு ஆட்பட்டிருந்த பெற்றோர்களுக்குப் பிறந்தவர். ஆப்ரகாம் லிங்கனின் அடிமைமுறை ஒழிப்பு அறிவிக்கை நடைமுறைக்கு வந்ததால் அந்தக் கொடுமையிலிருந்து பிறந்த சில மாதங்களிலேயே மீட்கப்பட்டுவிட்டார். சிறிது காலம் ஆசிரியையாகப் பணியாற்றிய அவர், ‘மிஸிஸிப்பி ப்ரீ ஸ்பீச் அன்ட் ஹெட்லைட்’ இதழில் நிறவெறிக் கொடுமைகளைப் பற்றி எழுதத் தொடங்கினார்.
தனது முப்பதாவது வயதில் மெம்பிஸ் நகரில் மூன்று கருப்பின வியாபாரிகள் அடித்துக்கொல்லப்பட்டதை விசாரித்து அவர் எழுதிய புலனாய்வுக் கட்டுரை கவனம்பெற்றது. நடந்த சம்பவம் இதுதான். கருப்பினத்தவர்கள் நடத்திக்கொண்டிருந்த மளிகைக்கடை பொதுமக்களுக்குத் தொல்லை கொடுப்பதாக வெள்ளைக்காரர்கள் உள்ளூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்கள். தொழில் போட்டியே அதற்கான உண்மைக் காரணம். நீதிமன்றமும் உடனே அந்தக் கருப்பினத்தவர்களைக் கைதுசெய்யுமாறு உத்தரவிட்டது. கடையைப் பாதுகாப்பதற்கு கருப்பினத்தவர்கள் முயற்சிக்க வெள்ளைக்காரர்கள் காவல் துறையினருடன் கைகோத்து தாக்குதலில் இறங்கினர். முப்பது கருப்பர்கள் கைதுசெய்யப்பட்டார்கள். அவர்களில் மூன்று பேரை சிறையிலிருந்து கைப்பற்றி கொலைசெய்தது வெள்ளைக்கும்பல். இதைப் பற்றி விரிவாக வெளியுலகுக்குக் கவனப்படுத்திய வெல்ஸ், மெம்பிஸில் வசிக்கும் கருப்பர்கள் உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறும் கேட்டுக்கொண்டார். பலரும் அவரது அறிவுரையை ஏற்று உயிர் தப்பித்தார்கள்.
வெல்ஸ் மீது ஆத்திரம் கொண்ட கலவரக் கும்பல் ஒன்று அவரது பத்திரிகை அலுவலகத்தைத் தாக்கியது. நல்லவேளையாக, அவர் அப்போது நகரத்துக்கு வெளியிலிருந்ததால் உயிர்பிழைத்துக்கொண்டார். அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து சிகாகோவுக்கு இடம்பெயர்ந்தார். முப்பதாண்டுகள் வரை மிஸிஸிப்பிக்குத் திரும்பவில்லை என்பதே அவர் எவ்வளவு அச்சுறுத்தலுக்கு ஆளாகியிருப்பார் என்பதற்கான உதாரணம். கடும் அச்சுறுத்தலுக்கு நடுவே ஒரு புலனாய்வுப் பத்திரிகையாளராகத் தொடங்கிய அவரது பயணம் 1931-ல் அவர் காலமாகும்வரை தொடர்ந்தது. பெண்களுக்கான வாக்குரிமை இயக்கத்தில் அவரது பங்கு முக்கியமானது. ஆனாலும், கருப்பினப் பெண் என்பதால் அவர் பொதுவெளியில் உரிய அங்கீகாரத்தைப் பெறவில்லை என்பதே உண்மை.
இறந்து 89 ஆண்டுகளுக்குப் பிறகு ஐடா பி.வெல்ஸுக்கு இதழியலுக்கான பரிசு கிடைத்திருக்கிறது. ஆனால், ‘மிஸிஸிப்பி ப்ரீ ஸ்பீச்’ இதழின் ஏடுகள் ஒன்றுகூட இன்று கிடைக்கவில்லை. அந்தப் பத்திரிக்கை மட்டுமல்ல, அந்தக் காலகட்டத்தில் கருப்பினத்தவர்கள் நடத்திய 25 பத்திரிகைகளின் ஒரு பிரதிகள்கூட கிடைக்கிவில்லை. எந்தவொரு ஆவணக் காப்பகத்திலும் அவை பாதுகாக்கப்படவில்லை. மற்ற பத்திரிகைகளில் மறுபிரசுரம் செய்யப்பட்ட கட்டுரைகளைக்கொண்டே கருப்பினத்தவர்கள் வெளியிட்ட அந்தப் பத்திரிகைகளின் செயல்பாட்டையும் தீவிரத்தையும் புரிந்துகொள்ளமுடிகிறது. கருப்பினத்தவர்களின் உரிமைக்குரலாக ஒலித்த பத்திரிகைகளின் ஒரு பிரதியைக்கூட பாதுகாத்துவைக்காத தேசத்தில் அந்தக் காலக்கட்டத்தில் வாழ்ந்த முக்கியமான ஒரு பத்திரிகையாளருக்குக் கிடைத்திருக்கும் கௌரவம் காலம் தாழ்ந்ததாக இருக்கலாம், ஆனால் காலமாற்றத்தின் குறியீடும்கூட.