சுமந்திரன் கூறுவதுபோல சம்பந்தர் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தார் என்பது உண்மையே என தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் குறிப்பிட்டுள்ளார்.
சம்பந்தர் விக்கினேஸ்வரனிடம் ஏமாந்துவிட்டார் என அண்மையில் தமிழரசுக் கட்சியின் பேச்சாளர் சுமந்திரன் கூறியிருந்தார். அதற்குப் பதிலளித்த போதே தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளர் க.அருந்தவபாலன் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியின் ஊடகப் பேச்சாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில்
கொழும்பு வாழ்க்கை, மேட்டுக்குடிப் பின்னணி, தமிழ்மக்களுக்கு நன்றாக அறிமுகமான முகம், போதாக்குறைக்கு சிங்கள மணவுறவு போன்றவற்றை வைத்து தங்களைப்போல தமிழ்மக்களை ஏமாற்ற பெரிதும் பொருத்தமானவர் எனநம்பிய சம்பந்தன் விக்னேஸவரனிடம் ஏமாந்தது உண்மையே. ஆனால் தமிழ்மக்கள் விக்னேஸ்வரனிடம் ஏமாறவில்லை. அவரும் தமிழ்மக்களை ஏமாற்றவில்லை. சம்பந்தன் எதிர்பார்த்தது போல தேர்தல்களில் குறிப்பாக மாகாணசபைத் தேர்தலில் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை அவர் கைவிடவில்லை< ஒற்றையாட்சியை சமஸ்டி என்று கூறி மக்களை ஏமாற்றவில்லை.
இனப்படுகொலைத்தீர்மானத்தை நிறைவேற்றாது விடவில்லை
பதவி,பணம்,சுகபோகங்களுக்காக விலைபோகவில்லை
சர்வதேசத்தில் இலங்கையரசைப் பிணை எடுப்பதற்கு துணை நிற்கவில்லை
கணக்கெதுவும் காட்டாத கட்சிக்காக வெளிநாட்டில் நிதி சேகரிக்கப் போகவில்லை
இவை எல்லாவற்றுக்கும் மேலாக அவர்களின் திருகுதாளங்களை மறைப்பதற்குத் துணை போகவில்லை
என்பதனால் விக்னேஸ்வரனிடம் ஏமாந்தது உண்மையே விக்னேஸ்வரன் தான் சொன்னதுக்கு மாறாக தமிழ் மக்கள் பேரவையை அரசியல் கட்சியாக மாற்றவில்லை. பேரவை வேறு. தமிழ்மக்கள் கூட்டணி வேறு. இக் கட்சி கூட தமிழ்மக்களின் வேண்டும் கோளைப் புறந்தள்ளமுடியாது உருவாக்கப்பட்டது. தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தமிழ்மக்களுக்கு நேர்மையாக இருந்திருந்தால் இக்கட்சிதோன்றவேண்டிய அவசியம் இருந்திருக்காது. மேலும் நல்லாடசியிடம் சம்பந்தன் ஏமாறவில்லை எனச் சுமந்திரன் சொல்வது உண்மையானால் ஏமாந்துவிட்டோம் என தலைவர் உட்பட அவரது கட்சியினர் சொன்னது பொய்யா?
அவரது கட்சியினர் சொன்னது பொய்யானால் சுமந்திரனும் சம்பந்தனும் எமது மக்களை மட்டுமல்ல அவரது கடசியினரையும் ஏமாற்றியது உண்மையாகும் என்றுள்ளது
Eelamurasu Australia Online News Portal