கொரோனா அச்சத்திலும் அகதியை சீண்டும் அவுஸ்ரேலியா!

ஆஸ்திரேலியாவில் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் இருந்த குர்து அகதி ஒருவர், தடுப்பு நிலைமைகளை முன்னேற்றும்படி போராட்டம் நடத்தியதற்காக வழக்கமான தடுப்பு மையத்தில் சிறைப்படுத்தப்பட்டுள்ளார்.

ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடையும் முயற்சியில் ஈடுபட்ட பர்ஹத் பந்தேஷ் எனும் அந்த அகதி, மனுஸ்தீவில் செயல்பட்ட ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாமில் ஆறு ஆண்டுகள் சிறைப்படுத்தப்பட்டிருந்தார்.

கடந்த 2019ம் ஆண்டு, உடல் மற்றும் மனநல சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்பட்ட இவர், மெல்பேர்னில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் வைக்கப்பட்டிருந்தார். இந்த ஹோட்டல், தடுப்பிற்கான மாற்று இடமாக கருதப்படுகின்றது.

கொரோனா வைரஸ் அச்சம் ஏற்பட்ட சூழலில், சானிடைசர் உள்ளிட்ட சுகாதார பாதுகாப்பிற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அகதிகளை/ தஞ்சக்கோரிக்கையாளர்களை வைத்துள்ள ஹோட்டலில் ஆள் நெருக்கடி சூழல் உள்ளதாகவும் கூறி அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இந்த சூழலில் போராட்டத்தில் ஈடுபட்டதற்காக தன்னை ஹோட்டலில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றி மெல்பேர்ன் குடிவரவு மையத்திற்கு மாற்றியுள்ளதாக பந்தேஷ் தெரிவித்துள்ளார்.