கொரோனா வைரஸ் ரகசியங்களுடன் காணாமல் போன வவ்வால் பெண் ஷி ஜெங்லியாக, மர்மப்பெண்ணாகத்தான் உலகின் கண் முன்னால் இப்போது தோன்றுகிறார்.அந்தப் பெண்ணின் பெயர் வேண்டுமானால் ஷி ஜெங்லியாக இருக்கலாம்.
ஆனால் உலகம் அவரை ‘பேட் உமன்’ (வவ்வால் பெண்) என்றுதான் செல்லமாய் அழைக்கிறது. அவரை இந்த உலகமே இப்போது தேடிக்கொண்டிருக்கிறது. அவர் எங்கே போனார்? என்ன ஆனார்? என்பது இந்த வினாடி வரையில் மர்மமாகத்தான் இருக்கிறது. அவர் மர்மப்பெண்ணாகத்தான் உலகின் கண் முன்னால் இப்போது தோன்றுகிறார்.
இந்த ‘வவ்வால் பெண்’ சாதாரண பெண் அல்ல. அந்தப் பெயரே அவருக்கு காரணப்பெயர்தான்.
இவரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன் இவரது சுயவிவரத்தை கொஞ்சம் தெரிந்து கொள்வது அவசியம்.
இவரது பிறப்பிடம் -சீனா மாகாணத்தில் உள்ள ஜிக்ஜியா கவுண்டி.
பிறந்த தேதி – 1964-ம் ஆண்டு மே மாதம் 26-ந் தேதி
படிப்பு – வுகான் பல்கலைக்கழகத்தில் பரம்பரை உயிரியலில் பட்டம். அடுத்து உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் முதுநிலை பட்டம். அதைத் தொடர்ந்து 2000-ம் ஆண்டில் பிரான்சில் உள்ள மாண்ட்பெல்லியர் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்.
இதுதான் இவரது சுயவிவரம்.
இந்தப் பெண்ணுக்கு வவ்வால் ஆராய்ச்சி என்றால் கொள்ளை இஷ்டம். வவ்வால்கள்தான் சார்ஸ் போன்ற கொரோனா வைரஸ் வகைகளின் உறைவிடம் என்பதை இவரும், இவரது குழுவினரும்தான் கண்டுபிடித்து உலகத்துக்கு சொன்னார்கள்.
தொடர்ந்து வவ்வால் ஆராய்ச்சியில் ஈடுபட்டு வந்ததால் ‘பேட் உமன்’ என்பது இவரது செல்லப்பெயராயிற்று.
“கொரோனா வைரஸ் வுகான் நகரில், கடல்வாழ் உயிரினங்களை விற்கிற சந்தையில் இயற்கையாக உருவான வைரஸ் என்று சொல்லப்படுவதில் உண்மை இல்லை. இந்த வைரஸ் அந்த சந்தைக்கு பக்கத்தில் அமைந்துள்ள வுகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டில் செயற்கையாக உருவாக்கப்பட்டதுதான், அங்கிருந்து கசிந்துதான் அது உலகம் முழுவதும் இப்போது பரவி விட்டது” என்பதுதான் அமெரிக்கா மற்றும் மேற்கத்திய நாடுகளின் தொடர் குற்றச்சாட்டு.
அந்த வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் இயக்குனர் பொறுப்பில் இருந்தவர் இந்த வவ்வால் பெண்தான்.
கடந்த டிசம்பர் மாதம் 1-ந் தேதி கொரோனா வைரஸ் வுகான் நகரில் முதன்முதலாக தென்பட்டதாக உலகத்துக்கு தெரிய வந்தபோதே, இந்த வவ்வால் பெண் காணாமல் போய்விட்டார்.
அவரைப் பற்றி எழுந்துள்ள பரபரப்பு குற்றச்சாட்டு, அவர் கொரோனா வைரஸ் பற்றிய மர்ம தகவல்கள் மற்றும் ரகசியங்களுடன் மேற்கத்திய நாடு ஒன்றுக்கு தாவி விட்டார் என்பதுதான்.
இந்த குற்றச்சாட்டை, அந்த வவ்வால் பெண் இப்போது மறுத்திருக்கிறார். இந்த மறுப்பு எப்படி வந்திருக்கிறது?
திடீரென காணாமல் போய், மூளைச்சாவு அடைந்து விட்டார் என்றெல்லாம் கிசுகிசுக்கப்பட்டு, இப்போது பொதுவெளிக்கு வந்து, “இல்லை.. இல்லை.. நான் உயிரோடுதான் இருக்கிறேன்” என்று காட்டிக் கொண்டிருக்கிற வட கொரியா தலைவர் கிம் ஜாங் அன் போல இவரும் வெளியுலகில் தோன்றி இருக்கிறாரா? என்றால், அதுதான் இல்லை.
இப்போது ‘வீசாட்’ என்ற சமூக ஊடகத்தின் வழியேதான் அவர் மறுப்பு தெரிவித்து இருக்கிறார். அதில் அவர் என்ன சொல்லி இருக்கிறார்?
“ நானும், குடும்பமும் நன்றாகவே இருக்கிறோம் அன்பு நண்பர்களே…
நாட்டை விட்டு தாவிச்செல்வது என்பது எத்தனை கடினமானது… அது ஒரு போதும் நடக்காது.. நாங்கள் தவறாக எதையுமே செய்து விடவில்லை. அறிவியலின் மகத்தான நம்பிக்கையுடன் சொல்கிறேன். மேகங்கள் கலைந்து சூரியனைக் காணும் நாள் வரும். அப்போது சூரியன் பிரகாசிப்பதைக் காண்போம்”.
இவ்வளவுதான். இத்துடன் 9 படங்களையும் வெளியிட்டிருக்கிறார்.
அவர் எங்கே இருக்கிறார்? எப்படி இருக்கிறார்? யாருடன் இருக்கிறார்? ம்கூம். எதுவும் தெரிவிக்கவில்லை. அவரைப்போலவே அவரது பதிவும் மர்மமாகவே இருக்கிறது.
இதை பீஜிங்கில் இருந்து வெளிவருகிற ‘குளோபல் டைம்ஸ்’ நாளிதழ் எடுத்து வெளியிட்டு உலகத்துக்கு தெரியவைத்து இருக்கிறது. ஆனால் அதே நாளிதழ், “இந்த வவ்வால் பெண், சமூக ஊடகத்தின் வழியாக மறுப்பு வெளியிடுவது ஒன்றும் புதிதில்லை. அவர் கடந்த பிப்ரவரி 2-ந் தேதியும் தனது வீசாட் பக்கத்தில் ஒரு மறுப்பு வெளியிட்டிருந்தார்” என்று சுட்டிக்காட்டுகிறது.
அந்த பதிவில் அவர் சொல்லி இருந்தது, “கொரோனா வைரஸ் என்பது சுகாதாரமற்ற வகையில் வாழ்ந்து வந்த மனிதர்களுக்கு இயற்கை கொடுத்த தண்டனை. நான் சத்தியமாக சொல்கிறேன், இந்த வைரசுக்கும் எங்களது உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டுக்கும் எந்த தொடர்பும் இல்லை.” என்பதுதான்.
ஆனாலும் இந்த வவ்வால் பெண்ணைப் பற்றிய வதந்திகள் மேற்கத்திய சமூக ஊடகங்களில் நீண்ட காலமாகவே தொடர் கதையாய் வலம் வருகின்றன.
அவையெல்லாம் ஒரே குரலில் ஓங்கிச் சொல்வது என்ன?
“உகான் வைராலஜி இன்ஸ்டிடியூட்டின் இயக்குனரான வவ்வால் பெண் ஷி ஜெங்லி, புதையல் போன்ற ரகசிய தகவல்களுடன் பாரீஸ் நகரில் உள்ள அமெரிக்க தூதரகத்துக்கு தாவிச் சென்று விட்டார்” என்பதுதான்.
இப்போது அவர் ‘வீசாட்’ சமூக ஊடகம் மூலம் வெளியிட்டிருக்கிற மறுப்பு பதிவு வந்துள்ள தருணம், கொஞ்சம் யோசிக்க வைக்கிறது.
அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தொடங்கி மேற்கத்திய நாடுகளின் தலைவர்கள் பலரும், கொரோனா வைரஸ் உகான் ஆய்வுக்கூடத்தில் உருவாக்கப்பட்டு, அங்கிருந்துதான் வெளி உலகத்துக்கு கசிந்துள்ளது என்று ஓங்கி குரல் கொடுக்கத் தொடங்கியுள்ள தருணத்தில் வவ்வால் பெண்ணின் மறுப்பு வந்திருக்கிறது.
கொரோனா வைரசின் தோற்றம் பற்றி விசாரணை நடத்த வேண்டும் என்று அமெரிக்காவும், பிற உலக தலைவர்களும் மிகுந்த அழுத்தம் தந்து வருகிற நிலையில், அதை சீனா கடுமையாக எதிர்க்கிறது.
வவ்வால் பெண் கொரோனா வைரசின் மரபணு வரிசையை கண்டுபிடித்த உடனேயே, சீன அரசாங்கத்தால் அவருக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்றும் தகவல்கள் வெளிவந்தது இங்கு குறிப்பிடத்தக்கது.
ஏப்ரல் 29-ந் தேதி சீன அரசின் சிஜிடிஎன் டெலிவிஷன், “கொரோனா வைரசின் தோற்றம் பற்றி கண்டறிய வேண்டும் என்பது டிரம்ப் மற்றும் பல நாடுகளின் கோரிக்கையாக அமைந்துள்ளது. இதுபற்றி அமெரிக்க விஞ்ஞானிகள் சீனாவில் உள்ள தங்கள் சக விஞ்ஞானிகள் மூலம் இணைந்து செயல்பட தொடங்கி விட்டார்கள்” என செய்தி வெளியிட்டது.
ஆனால் அதன் பின்னர் அதிகாரபூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை.
ஆனால் சீனா, “இது போன்ற விசாரணைக்கு முன்னுரிமையோ, சட்டப்பூர்வ அடிப்படையோ கிடையாது. கடந்த காலங்களில் இதுபோன்ற தொற்று நோய்கள் தொடர்பான விசாரணைகளில் எந்தவொரு முடிவும் தெரிய வந்தது இல்லை” என்று கூறி முற்றுப்புள்ளி வைக்க பார்க்கிறது.
ஆனால் நடந்தது என்ன என்ற உண்மைகள் வெளிவர வேண்டுமானால், வவ்வால் பெண் ஷி ஜெங்லி வெளியே வந்தாக வேண்டும். அவர் வெளியே வருவாரா? அவர் உயிருடன்தான் இருக்கிறாரா? அவரை சீனா இன்னும் விட்டு வைத்திருக்கிறதா? அவரது பெயரில் இப்போது ‘வீசாட்’ சமூக ஊடகத்தில் வெளியான பதிவு அவர் வெளியிட்டதுதானா?
கேள்விகள் நீளுகின்றன. பதில்கள்தான் இல்லை!