கொரோனாவால் ஆஸ்கார் விருதுக்கான விதிமுறைகளில் மாற்றம்

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் காரணமாக, ஆஸ்கார் விருது வழங்கும் விதிமுறைகளில் தற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

ஹாலிவுட் திரையுலகின் கவுரவமிக்க விருதாக கருதப்படுவது, ஆஸ்கார் எனப்படும் அகாடமி விருது. கதை, வசனம், இயக்கம், இசை, நடிப்பு என 24 பிரிவுகளில் இந்த விருது வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி அடுத்தாண்டு ஆஸ்கார் விருது நிகழ்ச்சி பிப்ரவரி 28-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் காரணமாக திரையரங்குகள் மூடப்பட்டு விட்டதால், படங்களை நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியிட்டு வருகின்றனர். இதுபோன்ற படங்களுக்கு ஆஸ்கார் விருது கிடைக்குமா என்ற அச்சம் நிலவி வந்தது. ஏனெனில் குறைந்தபட்சம் ஒரு வாரமாவது திரையரங்குகளில் திரையிடப்பட்ட படங்கள் தான் ஆஸ்காருக்கு அனுப்பப்பட வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆஸ்கார் விருது
இந்நிலையில், கொரோனா காரணமாக அந்த விதியில் ஆஸ்கார் கமிட்டி தற்காலிக மாற்றம் செய்துள்ளது. அதன்படி நேரடியாக இணையதளங்களில் வெளியாகும் படங்களும் ஆஸ்காருக்கு அனுப்பலாம். ஆனால் அந்த படங்கள் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்ட படங்களாக இருக்க வேண்டும். நேரடியாக இணையதளங்களில் வெளியிடுவதற்காக தயாரித்த படங்களாக இருக்க கூடாது என்பதையும் தெளிவுபடுத்தி உள்ளது.
இந்த விதிமுறை தளர்வு தற்காலிகமானது தான் என்றும், கொரோனா பிரச்சனை முடிவுக்கு வந்ததும் பழைய விதிமுறையே பின்பற்றப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.