கொரோனாவுக்கு எதிரான போரில், சீனா மிகப்பெரிய சாதனை படைத்துள்ளது என்று சீன அதிபர் ஜின்பிங் தெரிவித்தார்.
நேற்று மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. இதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 82 ஆயிரத்து 862 ஆக உயர்ந்தது. புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை. அதனால், பலி எண்ணிக்கை 4 ஆயிரத்து 633 ஆக நீடிக்கிறது.
சீன நாடாளுமன்றத்தின் வருடாந்திர கூட்டத்தொடர், கடந்த மார்ச் மாதம் நடைபெற இருந்தது. ஆனால், கொரோனாவின் கோரத்தாண்டவத்தால், அப்போது தள்ளி வைக்கப்பட்ட கூட்டத்தொடர், வருகிற 22-ந் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தொடர் குறுகிய காலம் நடைபெறக்கூடும். காணொலி காட்சி மூலம் நடக்க வாய்ப்புள்ளதாக தெரிகிறது. நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறுவதையொட்டி, ஆளும் சீன கம்யூனிஸ்டு கட்சியின் மத்திய குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. அதில், அதிபர் ஜின்பிங் பங்கேற்றார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-
கொரோனாவுக்கு எதிராக நாடு முழுவதும் நடந்த போரில், சீனா மிகப்பெரிய போர்த்திற சாதனை படைத்துள்ளது. சீனாவின் முயற்சிகளுக்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.
இருப்பினும், உகான் நகரம் அடங்கிய ஹுபெய் மாகாணத்தில் சமுதாய பரவல் நிலையை எட்டிவிடாமல் தடுப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்.
ரஷியாவை ஒட்டிய ஹெய்லாங்ஜியாங் மாகாணத்தில், ரஷியாவில் இருந்து திரும்பிய சீனர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டது. அங்கும் அதிகாரிகள் விழிப்புடன் இருக்க வேண்டும்.
வர்த்தக நிறுவனங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும். சிறு, குறு தொழில்களுக்கு புத்துயிரூட்ட வேண்டும். வாகன உற்பத்தி தொழில்கள், மின்னணு பொருட்கள் உற்பத்தி தொழில்களை ஊக்குவிக்க வேண்டும்.
வேளாண் உற்பத்தியை ஊக்குவித்து, விவசாயிகளுக்கு நல்ல வருவாய் கிடைக்கச் செய்ய வேண்டும்.
கஷ்டப்பட்டு படைத்த சாதனைகளை பாதுகாக்கும்வகையில், நோய் தடுப்பு நடவடிக்கைகளில் எந்த தளர்வும் இருக்கக்கூடாது. இவ்வாறு ஜின்பிங் பேசினார்.