வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ் மூன்று மாதங்கள் மருத்துவ விடுமுறை கோரியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
கோட்டாபய ராஜபக்ஷவிடம் இந்த அனுமதியை அவர் கோரியுள்ளதுடன் முதலாம் திகதியான இன்று (வெள்ளிக்கிழமை) முதல் வரும் மூன்று மாதங்களுக்கு அவர் இந்த விடுப்பைக் கோரியுள்ளார்.
அத்துடன், ஆளுநரின் பணிகளை ஒழுங்குபடுத்தி நிர்வாகத்தை முன்னெடுக்க வடக்கு மாகாண பிரதம செயலாளர் பத்திநாதன், ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலன் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் எல். இளங்கோவன் ஆகியோரைக் கொண்ட குழுவை அனுமதிக்குமாறும் ஆளுநர் தனது கடிதத்தில் கேட்டுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் வேறொரு மாகாண ஆளுநர், வடக்கு மாகாண பதில் ஆளுநராக மூன்று மாதங்களுக்கு நியமிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை, வடக்கு மாகாண ஆளுநர் பி.எம்.எஸ்.சார்ள்ஸ், அண்மைக்காலமாக கொழும்பிலுள்ள வடக்கு மாகாண ஆளுநர் அலுவலகத்திலிருந்தே பணிகளை முன்னெடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal