அவுஸ்திரேலிய – சிறிலங்கா பாதுகாப்புக் கூட்டிணைவு

அவுஸ்திரேலியாவினால் வழங்கப்படும் தனி நபர் பாதுகாப்பு உபகரணங்கள் (PPE) தொகுதி ஒன்று, சிறிலங்காவுக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் டேவிட் ஹொலி மற்றும் அவுஸ்திரேலிய பாதுகாப்பு ஆலோசகர் குரூப்கப்டன் ஷோன் அன் வின் ஆகியோரினால், சிறிலங்காவில் கோவிட் 19 ஐ தடுப்பதற்கான தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் ஜெனரல் ஷவேந்திர சில்வாவிடம் ஏப்ரல் மாதம் 29 ஆம் திகதி கையளிக்கப்பட்டது.

இந்தக் கையளிப்பு வைபவத்தின் போது கருத்து வெளியிட்ட அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் ஹொலி, ´உலக மட்டத்தில் சவாலை ஏற்படுத்தியுள்ள கோவிட் 19 இன் சர்ச்சை எதிர்நோக்கப்படு வரும் இத்தருணத்தில் அவுஸ்திரேலியா தனது ஒத்துழைப்பை சிறிலங்காவுக்கு பெற்றுக் கொடுக்கிறது. இதில் முக்கியமாக, கோவிட் 19 ஐ தடுக்கும் நடவடிக்கையில் முன்னின்று செயற்படுவோரைப் பாதுகாப்பதற்கான உபகரணங்களை சிறிலங்காவுக்கு பெற்றுக் கொடுப்பதில் அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புத் திணைக்களம் மிகவும் மகிழ்ச்சியடைகிறது.´

இவ்வாறு வழங்கப்படும் பொருட்களில் சிறிலங்கா செயற்படும் அவுஸ்திரேலிய நிறுவனம் ஒன்றான அன்செல் மூலம் தயாரிக்கப்பட்ட 10,000 உயர்தர தனி நபர் பாதுகாப்பு உபகரணங்களும், 200,000 கையுறைகளும் அடங்குகின்றன. இவை, சிறிலங்காவில் கோவிட் 19 பரவுவதைத் தடுப்பதற்கு உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

இதன் மூலம்,சிறிலங்காவில் கோவிட் 19 ஐ சமாளிப்பதற்கு அவுஸ்திரேலிய அரசாங்கம் மொத்தம் 1.47 மில்லியன் அவுஸ்திரேலிய டொலர்களை உதவியாக வழங்கியுள்ளது. இவற்றில், தேசிய ஆய்வுகூடங்களைப் பலப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சுக்கு வழங்கப்பட்ட உதவிகளும், சிறிலங்காவுக்கான பொது மக்களுக்கு வழங்கப்பட்ட முக்கியமான அத்தியாவசிய உணவு மற்றும் பாதுகாப்பு சுகாதார பொருட்களும் உள்ளடங்கப்படுகிறது.