சீனாவினால் இன்று 184 நாடுகள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றன: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ஆவேசம்

சீனாவின் வூஹானில் தோன்றிய கரோனா வைரஸ் அந்த நாட்டில் தொடங்கி இன்று 190 நாடுகளை ஆட்டிப்படைப்பதில் பாதிப்பு எண்ணிக்கை 31 லட்சத்து 38 ஆயிரத்து 115 ஆக உள்ளது, இதில் பலியானோர் எண்ணிக்கை 2,17,970 ஆக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் சீனா மீது உலக நாடுகள் அனைத்திற்கும் பெரிய அளவில் கோபாவேசம் கிளம்பியுள்ளது, இதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விசாரணை அளவுக்குச் சென்று விட்டார், மேலும் பல நடவடிக்கைகளை சீனா மீது எடுக்குமாறு ட்ரம்புக்கு நெருக்கடிகள் அதிகரித்து வருகின்றன.

அமெரிக்க எம்.பி.க்கள் பலர் சீனாவை நம்பியிருக்கும் உற்பத்தி துறையையும் கனிமவளங்களையும் விடுவிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

“கண்ணுக்குத் தெரியா விரோதி’ கரோனாவை சீனா அதன் முளையிலேயே கிள்ளி எறிந்திருந்தால் இன்ரு 184 நாடுகள் நரக வேதனையை அனுபவித்து வராது என்கிறார் ட்ரம்ப்.

அமெரிக்கா, பிரிட்டன், ஜெர்மனி அரசியல் தலைவர்கள் அனைவரும் சீனா மட்டும் சுயநலமாக இல்லாமல் கரோனா பற்றிய தகவலை ஒழுங்காகப் பகிர்ந்திருந்தால் இன்று இவ்வளவு மரணங்களையும் பொருளாதார சீரழிவுகளையும் சந்திக்க நேரிட்டிருக்காது.

வெள்ளை மாளிகையில் நிருபர்களுக்குப் பேட்டி அளித்த ட்ரம்ப், “184 நாடுகள், இதை நான் அடிக்கடி கூறுவதை நீங்கள் கேட்டிருப்பீர்கள். நம்ப மிகவும் கடினமாக இருக்கிறது. கரோனாவை அது தோன்றிய இடத்திலேயே கிள்ளி எறிந்திருக்க வேண்டும். ஆனால் செய்ய வில்லை, இதனால் இன்று 184 நாடுகள் நரக வேதனையை அனுபவித்து வருகின்றன

அமெரிக்கா தன் தொழிற்துறையில் சீனாவை நம்பியிருப்பதை குறைக்க வேண்டும் என்றும் சீனாவிடமிருந்து கரோனா இழப்பீடாக பெரிய தொகையைக் கேட்க வேண்டும் என்றும் அமெரிக்காவில் அதிபர் ட்ரம்புக்கு அழுத்தங்கள் அதிகரித்து வருகின்றன.

ராணுவ தொழில்நுட்பங்களுக்கு தேவைப்படும் அரிய கனிமவளங்கள் மற்றும் ரசாயனங்களுக்கான உள்நாட்டு சப்ளை செயினை வளர்த்தெடுக்க வேண்டும். என்று செனட்டர்கள் ட்ரம்பிடம் வலியுறுத்தி வருகின்றனர்.

முக்கிய தொழில்நுட்ப உற்பத்திகளுக்கான அரிய பூமி கனிமவளங்களைப் பொறுத்தமட்டில் அமெரிக்கா 100% இறக்குமதியைத்தான் நம்பியிருக்கிறது

சீனாவினால் பெரிய சேதம் ஏற்பட்டுள்ளது, இதனால் சீனாவுக்கு கொடுக்க வேண்டிய இறக்குமதி நிலுவைத் தொகையைக் கொடுக்க வேண்டாம் என்றும் இதனை கரோனா பாதிப்பு இழப்பீடாக சரிக்கட்ட வேண்டும் என்றும் ட்ரம்புக்கு செனட்டர்கள் நெருக்கடி அளித்து வருகின்றனர்.

எனவே கரோனா தாக்கம் முடிந்தவுடன் சீனாவுடனான வர்த்தகம் குறித்த முக்கிய முடிவுகளை அமெரிக்கா உள்ளிட்ட மேலை நாடுகள் எடுக்கும் என்று தெரிகிறது.