நியூயார்க் பிரெஸ்பைடீரியன் மருத்துவமனையின் கரோனா அவசரச் சிகிச்சைப் பிரிவில் பணியாற்றிய டாக்டர் லோர்னா பிரீன் என்ற பெண் மருத்துவர் கண்ணெதிரே கரோனா பாதிப்பினால் காப்பாற்ற முடியாமல் நோயாளிகள் மரணமடைவதைத் தாங்க முடியாமல் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டது அங்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஞாயிறன்றி அவர் தன் முடிவைத் தானே தேடிக்கொண்டார் என்ரு லோர்னா பிரீனின் தந்தை டாக்டர் திலீப் பிரீன் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகைக்கு தெரிவித்தார்.
அமெரிக்க கரோனா பலி எண்ணிக்கை 59,000த்தைக் கடந்துள்ள நிலையில் நியூயார்க்கில் மட்டும் 17,500 பேர் கரோனாவுக்குப் பலியாகியுள்ளனர். லோர்னா பிரீன் கரோனாவினால் ஏற்கெனவே பாதிக்கப்பட்டு குணமடைந்து மீண்டும் மருத்துவப் பணிக்கே திரும்பியவர். தானும் பிற மருத்துவர்களும் எப்படிப் போராடியும் நோயாளிகளைக் காப்பாற்ற முடியாமல் கண்ணெதிரே அவர்கள் உயிர்ப்பிரிவதை தன்னால் தாங்க முடியவில்லை என்று அவர் பல முறை கூறியதாக அவரது தந்தை வேதனையுடன் தெரிவிக்கிறார்.
இவரது வேதனையைப் புரிந்து கொண்ட மருத்துவமனை நிர்வாகம் இவரை வீட்டுக்குச் செல்லுமாறு கூறி விடுவித்தது. அம்மா, சகோதரியுடன் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் தொடர்ந்து மன வேதனையில் இருந்ததாகவும் யாருடனும் சரியாகப் பேசாமல் இருந்ததாகவும் கூறப்படுகிறது.
நியூயார்க்கில் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவில் பணியாற்றும் மருத்துவர்கள், நர்ஸ்கள் உள்ளிட்ட ஊழியர்கள் கடும் அவதிக்கும், மன உளைச்சலுக்கும் ஆளாகி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் 300 மருத்துவர்கள் தற்கொலை செய்து கொள்வதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் தற்கொலை செய்து கொண்ட டாக்டர் லோர்னாவை ‘ஹீரோ’ஆகக் கொண்டாடுமாறு அவரது தந்தை கேட்டுக் கொண்டுள்ளார்.