கொரோனாவில் இருந்து வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள குழந்தைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்று திவ்யா சத்யராஜ் கூறியுள்ளார்.
பிரபல நடிகர் சத்யராஜின் மகளும், ஊட்டச்சத்து நிபுணருமான திவ்யா சத்யராஜ், கொரோனா பீதி காரணமாக பள்ளிகள் இயங்காததால், வறுமையில் வாடும் குடும்பங்களில் வசித்து வரும் குழந்தைகளுக்கு சத்தான சாப்பாடு கிடைக்காமல் அவர்கள் ரத்தசோகை மற்றும் இரும்பு சத்து குறைபாடுகளால் பாதிக்கப்படுவார்கள் என்பதை தெரிவிக்கும் விதமாக முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியுள்ளதாவது… ” கடந்த சில மாதங்களுக்கு முன்பு நான் அரசு பள்ளி குழந்தைகளில் வைட்டமின் குறைபாடு குறித்து ஒரு ஆராய்ச்சி மேற்கொண்டேன். அப்போது… கார்ப்பரேஷன் பள்ளிகளில் 38% சிறுவர்கள் மற்றும் 40% இளம் பருவ பெண் குழந்தைகளுக்கு, இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகை இருப்பது தெரியவந்தது. எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக அரசிடம் பேசினேன். அப்போது இரும்புச்சத்து குறைபாடு மற்றும் இரத்த சோகையை அவர்களின் மதிய உணவு திட்டத்தின் மூலம் நிவர்த்தி செய்யும் பணியில் அரசாங்கம் இறங்கியது.
இந்நிலையில் COVID-19 எனப்படும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக தற்போது பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டதால், கார்ப்பரேஷன் பள்ளி குழந்தைகளுக்கு இரும்புச்சத்து நிறைந்த உணவு மற்றும் மதிய உணவு திட்டத்தால் வழங்கப்படும் இரும்புச் சத்துக்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இரும்புச்சத்து நமது உடலின் நோய் எதிர்ப்பு சக்திக்கு அடிப்படையான ரத்த சிவப்பு அணுக்களுக்கு அத்தியாவசியமான ஒன்று.
நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தால் அந்த குழந்தைகளை கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியாது. அவர்களுக்கு கொரோனா வரும் வாய்ப்புகள் அதிகம்.
வறுமைக்கோட்டுக்கு கீழ் இருக்கும் குழந்தைகளும் கொரோனாவில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும்.
ஆரோக்கியமான வாழ்க்கை வசதியான குழந்தைகளுக்கு மட்டும்தான் என்பது நியாயம் கிடையாது. எனவே குறைந்த வருமானம் கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகளுக்கு இரும்புச் சத்து கொண்ட உணவுகளையும் இரும்புச்சத்து மருந்துகளையும் இலவசமாக வழங்குமாறு அரசிடம் கேட்டுக்கொள்கிறேன் என்று அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.