மக்கள் வெளியே பார்க்கும்போது அமைதியாக இருப்பதுபோல் தெரியலாம், ஆனால் லட்சக்கணக்கானோர் அழுதுகொண்டு இருக்கிறார்கள் என ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.
கொரோனா ஊரடங்கில் பிரபலங்களிடம் நடிகை குல் பனாக் வீடியோவில் பேட்டிகள் எடுத்து வெளியிட்டு வருகிறார். இதில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானும் பேட்டி அளித்துள்ளார். அவர் கூறியதாவது: நான் அறிவுரைகள் சொல்வது இல்லை. அவற்றை கேட்பேன். தற்போதைய சூழ்நிலையில் எல்லோருக்கும் இரக்க குணம் தேவை. பின்தங்கிய மக்களுக்கு உதவ வேண்டும். வெளியே பார்க்கும்போது அமைதியாக இருப்பதுபோல் தெரியலாம். ஆனால் லட்சக்கணக்கானோர் அழுதுகொண்டு இருக்கிறார்கள்.
அவர்களுக்கு உணவு, மருத்துவ உதவிகள் அளிக்க வேண்டும். அரசு சொல்வதை அனைவரும் கேட்க வேண்டும். மக்கள் வீட்டிலேயே இருக்க வேண்டும். இந்த துயரத்தில் இருந்து மீள இறைவனை வேண்டுவோம். இதில் இருந்து நகரங்களை எப்படி வைத்துக்கொள்வது என்று நாமும் கற்றுக்கொள்ள வேண்டும். சென்னையில் ஆகாயத்தை இத்தனை தெளிவாக நான் பார்த்தது இல்லை. ஞாபகத்தில் வைத்துக்கொள்ள புகைப்படம் எடுத்துள்ளேன். இவ்வாறு ஏ.ஆர்.ரகுமான் கூறினார்.