கிளிநொச்சி இராமநாதபுரம் கிழக்கு அழகாபுரி அ.த.க.பாடசாலையினை கிளிநொச்சி இரணைமடு விமானப்படையினர் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் அனுமதியுடன் பொறுப்பேற்றுள்ளனர்.
இரணைமடு விமானப்படையின் முகாமின் ஒரு பகுதி தற்போது கொரோனா தனிமைப்படுத்தல் நிலையமாக பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் அங்குள்ள விமானப்படையினர் தற்காலிகமாக தங்குவதற்கு எனத் தெரிவித்து குறித்த பாடசாலையினை பொறுப்பேற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விமானப்படையின் அதிகாரிகள் வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு அவரது அனுமதியுடன் பாடசாலையினை தங்களின் தேவைக்கு பெற்றுள்ளதாக கல்வித் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பாடசாலையினை சூழவும், கிராமத்திலும் பொது மக்கள் நெருக்கமாக வாழ்கின்ற பிரதேசம் என்பதனால் பிரதேச பொது மக்கள் மத்தியில் அச்சமான சூழல் நிலவி வருகிறது.
அழகாபுரி பாடசாலை விமானப்படையினர் பொறுப்பேற்ற விடயம் தொடர்பில் வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளருடன் தொடர்பு கொண்டு வினவிய போது
குறித்த பாடசாலையினை விமானப்படையினர் தங்களின் படையினர் தங்குவதற்காக தற்காலிகமாக கோரியதாகவும், அவர்களது விமானப் படை முகாம் தனிமைப்படுத்தல் நிலையமாக இருப்பதனால் அங்குள்ள விமானப்படையினர் தங்குவதற்கே கோரியுள்ளனர். தற்போது தேசிய இடர் காலம் என்பதனால் அதற்கும் நாட்டின் அனைத்து துறைகளும் ஒத்துழைப்பு வழங்க வேண்டியது பொறுப்பாகும்.
இந்த நிலையில் பாடசாலையினை ஆரம்பிப்பதற்கு இரண்டு வாரங்களுக்கு முன் பாடசாலையினை மீள வழங்க வேண்டும் எனத் தெரிவித்தே வழங்கியுள்ளதாக தெரிவித்த வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் இளங்கோவன் அவர்கள் பிராந்திய சுகாதார சேவைகள் திணைக்களம், கல்வித் திணைக்களம், பாடசாலை அதிபர், பாடசாலை சமூகம் ஆகியோரின் ஒத்துழைப்புடன் பாடசாலையினை பெற்றுக்கொள்ளுமாறும் அவர்களுக்கு தெரிவித்ததாக குறிப்பிட்டார்.
Eelamurasu Australia Online News Portal