சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போனை யாரும் விமானங்களில் எடுத்து வரவும், எடுத்து செல்லவும் கூடாது என்ற உத்தரவு அமலுக்கு வந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கொரியாவின் சாம்சங் நிறுவனம், ‘சாம்சங் கேலக்சி நோட் 7’ என்ற பெயரில் ஒரு ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்தது. இந்த போன் தீப்பிடிப்பதாக புகார்கள் எழுந்தன. இப்படி சுமார் 100 புகார்கள் வந்திருப்பதாக நுகர்வோர் பொருள் பாதுகாப்பு ஆணையம் கூறியது.
பேட்டரிகள் அதிக சூடாவதின் காரணமாகத்தான் இந்த ஸ்மார்ட் போன்கள் வெடிப்பதாகவும், தீப்பிடிப்பதாகவும் கூறப்பட்டது.
இப்படி தொடர்ந்து புகார்கள் வந்த காரணத்தால், பேட்டரி உற்பத்தியில் தவறு நேர்ந்து விட்டதாக கூறி, அந்த போன்களை உற்பத்தி செய்வதை நிறுத்தியதுடன், சந்தையில் விற்கப்பட்ட 25 லட்சம் போன்களை சாம்சங் நிறுவனம் திரும்பப்பெற்றது.
இந்த நிலையில் அமெரிக்க நாட்டில் விமானங்களில் எடுத்து வர சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போனுக்கு அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அமெரிக்க அரசு போக்குவரத்து துறை ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது.
அந்த உத்தரவில், “சாம்சங் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போனை யாரும் விமானங்களில் அமெரிக்காவுக்கு எடுத்து வரக்கூடாது. அமெரிக்காவில் இருந்து செல்கிற விமானங்களில் எடுத்து செல்லவும் கூடாது. அந்த ஸ்மார்ட் போனை பயணிகள் யாரேனும் வைத்திருப்பது சோதனையின்போது கண்டறியப்பட்டால் அது பறிமுதல் செய்யப்படும். அத்துடன் அபராதமும் விதிக்கப்படும்” என கூறப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நேற்று அமலுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக சாம்சங் விடுத்துள்ள அறிக்கையில், “இந்த தடை குறித்து வாடிக்கையாளர்களின் கவனத்துக்கு கொண்டு செல்வது குறித்து போக்குவரத்து துறையுடன் பேசி வருகிறோம்” என கூறப்பட்டுள்ளது.