பி.சி.ஜி. காசநோயைத் தடுப்பதற்குப் போடப்படும் பிரதான தடுப்பூசி. இது குழந்தைகளுக்கு ஏற்படும் பலதரப்பட்ட வைரஸ் நோய்கள், சுவாசக் கோளாறுகள், மூளைக்காய்ச்சல், வயிற்றுக் கோளாறுகள் போன்றவற்றையும் தடுக்கும். உடலின் தடுப்பாற்றல் மண்டலத்தைத் தூண்டி பொது ஆரோக்கியத்தை வலுப்படுத்தும்.
குழந்தைகளின் இறப்பு விகிதம் குறைந்துவருவதற்கு இதுதான் முக்கியக் காரணம். இவை எல்லாமே ஏற்கெனவே நிரூபிக்கப்பட்டுள்ள விஷயங்கள். ஆனாலும், இது வயது வந்தவர்களுக்குக் காசநோய் ஏற்படுவதைத் தடுப்பதில்லை என்பது இதில் உள்ள பெருங்குறை. இந்தச் சூழலில் கரோனா நோயை பி.சி.ஜி. தடுப்பூசி தடுக்கிறது என்று சொல்வதற்கு என்ன காரணம்?
கரோனா நோயால் இறந்தவர்களின் புள்ளிவிவரங்களைக் கவனித்தபோது பி.சி.ஜி. தடுப்பூசி போட்டுக்கொள்ளும் வழக்கமுள்ள உலக நாடுகளில் இறப்பு விகிதம் ஆறு மடங்கு குறைவாக இருப்பதுதான் காரணம்!
மேல் நாடுகளின் தீவிரம்
இதை உறுதிசெய்வதற்கு அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து ஆகிய நாடுகளில் பி.சி.ஜி. தடுப்பூசியை மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும் முதற்கட்டமாகப் போடத் தொடங்கிவிட்டனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு இவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படவில்லை என்றால், பி.சி.ஜி. தடுப்பூசி பலன் தருகிறது என்று பொருள். அதற்குப் பிறகு, இதுவரை இந்தத் தடுப்பூசி போட்டுக்கொள்ளாத மற்றவர்களுக்கும் இதைப் போட்டு கரோனாவிலிருந்து காப்பாற்றிவிடலாம் என்று முடிவுசெய்துள்ளனர்.
இந்தியாவிலும் இதுபோன்ற முயற்சிகளை மேற்கொள்வது நல்லது என்று அறிவியலாளர்களில் ஒரு சாரார் எதிர்பார்க்கின்றனர். கரோனாவைத் தடுக்க பி.சி.ஜி. தடுப்பூசி உதவுமா என்பதைத் தெரிந்துகொள்ளவும் அவர்கள் ஒரு வழி சொல்கின்றனர். அதாவது, இந்தியாவில் இதுவரை கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில் குறிப்பிட்ட நபர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு முன்கையில் ‘மாண்டோ பரிசோதனை’யை மேற்கொள்ள வேண்டும்.
இந்தியாவில் 1948-லிருந்து பி.சி.ஜி. தடுப்பூசி போடும் வழக்கம் உள்ளது. ஆகவே, அவர்களுக்கு ஏற்கெனவே பி.சி.ஜி. தடுப்பூசி போடப்பட்டிருந்து நோய்த் தடுப்புத் தன்மை இருக்குமானால், மாண்டோ போடப்பட்ட இடத்தில் 48 மணி நேரம் கழித்து வீக்கம் ஏற்படும். வீக்கம் இல்லையென்றால், அவர்கள் பி.சி.ஜி. தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை அல்லது அவர்களுக்கு நோய்த் தடுப்புத் தன்மை இல்லை என்று பொருள். இதை அடிப்படையாக வைத்து ஒரு புள்ளிவிவரம் தயாரிக்க வேண்டும். வீக்கம் இல்லாதவர்கள்தான் அதிக எண்ணிக்கையில் இருக்கிறார்கள் என்றால், அவர்களுக்கு பி.சி.ஜி. தடுப்புத் தன்மை இல்லை. இப்படி கரோனா பாதிப்பை பி.சி.ஜி. தடுப்பூசி கட்டுப்படுத்துகிறது என்று மறைமுகமாகக் கணித்துவிடலாம்.
இந்த முறையில் புதிய ஆய்வுகள் செய்ய வேண்டும். அதன்படி, கரோனாவை பி.சி.ஜி. தடுப்பூசி தடுப்பது உறுதியாகிவிட்டால், கரோனா நோயாளிகளைக் காக்க முன்னின்று போராடும் இந்திய மருத்துவர்களுக்கும் மருத்துவப் பணியாளர்களுக்கும், கரோனா வர வாய்ப்புள்ளவர்களுக்கும், முதியோருக்கும் பி.சி.ஜி. தடுப்பூசியைப் போட முன்வர வேண்டும். கரோனாவுக்கான பிரதான தடுப்பூசியானது களத்துக்கு வரும் வரை இந்தப் புதிய முயற்சியை மேற்கொள்ளலாம் என்கிறார்கள்.
குறைபாடுகள் என்னென்ன?
அதேவேளையில், இந்த ஆய்வுகளில் உள்ள குறைகளைச் சுட்டிக்காட்டும் காசநோய் ஆராய்ச்சியாளர்களும் உள்ளனர். கனடாவில் காசநோய் ஆராய்ச்சிப் பிரிவில் பணிபுரியும் மதுக்கர் பை, ‘பி.சி.ஜி. தடுப்பூசி கரோனாவைத் தடுக்கிறது என்று சொல்வதற்கான புள்ளிவிவரமே தவறு. இதை நம்பி இந்த ஆராய்ச்சியில் இந்தியா இறங்குவது நாட்டின் பொருளாதாரத்தை இன்னும் ‘சிக்கலாக்கி விடும்’ என்கிறார். ‘அதாவது, இதுவரை கிடைத்துள்ள புள்ளிவிவரங்கள் எல்லாமே சூழலியலைச் சார்ந்தவை. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களிடம் நேரடியாக இந்தத் தடுப்பூசியைப் பரிசோதிக்கவில்லை. எப்போதுமே சூழலியல் புள்ளிவிவரங்கள் நாட்டுக்கு நாடு வேறுபடும். பயனாளியின் குடும்பப் பொருளாதார நிலைமை மாறும்போது அதன் முடிவுகளும் மாறும். மேலும், இந்தியாவில் தினமும் ஆயிரம் பேர் காசநோயால் இறக்கின்றனர். இப்போதுள்ள ஊரடங்கால் ஏற்கெனவே காசநோய் சிகிச்சையில் இருப்போருக்கு மருந்து கிடைப்பதிலும், புதிய நோயாளிகளைக் கண்டறிவதிலும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமையை இந்தப் புதிய ஆராய்ச்சிகள் இன்னும் சிக்கலாக்கிவிடும். அதன் விளைவாக, ஊடகங்கள் கண்ணில் படாமலேயே காசநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாகிவிடும்’ என்று எச்சரிக்கிறார்.
அமெரிக்காவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர் கெவின் உர்தல் குழந்தைகளுக்குப் போடப்படும் பி.சி.ஜி. தடுப்பூசியை வயது வந்தவர்களுக்குப் போடுவது ஆபத்தானது என்கிறார். காரணம், சீனாவில் மேற்கொண்ட ஓர் ஆய்வில், ஏற்கெனவே காசநோய் இருந்தவர்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகரித்ததாகவும், இந்தியாவிலும் அந்த வாய்ப்பு இருக்கக்கூடும் என்று அவர் நம்புகிறார். இன்னொரு காரணம், கரோனாவால் உண்டாகும் பாதிப்புகளில் முக்கியமானதாகக் கருதப்படுவது ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ எனப்படும் தடுப்பாற்றல் மண்டலத்தின் அதீதச் செயல்பாடுதான். சோதனை முயற்சியாக பி.சி.ஜி. தடுப்பூசி போடப்படும்போது ‘சைட்டோகைன் ஸ்டார்ம்’ அதிகப்பட்டு, அறிகுறிகள் வெளியே தெரியாத கரோனா நோயாளிகளுக்குப் பாதிப்பை அதிகப்படுத்திவிடும் ஆபத்து இருப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்’ என்கிறார்.
ஆக, கரோனாவைப் பொறுத்த அளவில் பி.சி.ஜி. தடுப்பூசி இரட்டைமுனை கத்திபோன்றது. இந்திய சுகாதாரத் துறை அவசரப்படாமல் ஆபத்தில்லாத ஆய்வுகளுக்கு மட்டுமே முன்னுரிமை கொடுத்து இந்தப் பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்.
– கு.கணேசன், பொது நல மருத்துவர்.
தொடர்புக்கு: gganesan95@gmail.com