கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளால் உருவாகும் காய்ச்சலுக்கு கபசுர குடிநீர் மற்றும் தொந்தசுர குடிநீர் ஆகிய இரண்டு மருந்துகள் பயன்படும் என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கூறி இருக்கிறார்கள்.
ஆஸ்திரேலியாவின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகத்தில் உயிர்நுட்பவியல் ஆய்வாளராக இருந்து, தற்போது தமிழகத்தில் பாரம்பரிய மருத்துவம், மூலிகைகள் குறித்த நவீன ஆய்வுகளை மேற்கொண்டு, சஞ்சீவ் உயிர் மருத்துவ ஆராய்ச்சி மையத்தை சேர்ந்தவருமான விஞ்ஞானி எம்.எஸ்.ராமசாமி, சித்தா டாக்டர் மீனாட்சி சுந்தரம் மற்றும் பிச்சைகுமார் குழுவினர் கொரோனாவுக்கு எதிரான கபசுர மூலிகைகள் குறித்த ஆய்வை மேற்கொண்டு உள்ளனர். தங்கள் ஆய்வு தொடர்பாக அவர்கள் அளித்த பேட்டி வருமாறு:-
மனிதர்களுக்கு 64 வகையான காய்ச்சல் ஏற்படுவதாகவும், அதில் கொரோனா போன்ற வைரஸ் கிருமிகளால் உருவாகும் காய்ச்சலுக்கு கபசுர குடிநீர் மற்றும் தொந்தசுர குடிநீர் ஆகிய இரண்டு மருந்துகள் பயன்படும் என்று 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே சித்தர்கள் கூறி இருக்கிறார்கள்.
கொரோனா பாதிப்பின் முக்கிய அறிகுறியாக காய்ச்சலும் இருந்ததால் கபசுர குடிநீர் பற்றிய ஆய்வை சித்த மருத்துவ குழுவோடு இணைந்து நவீன முறையில் மேற்கொண்டோம்.
பொதுவாக, கொரோனா வைரஸ் மனித மூச்சுக்குழல் உயிரணு திசுக்களை தாக்கி அழிக்கும் இயல்புடையது. இந்த வைரஸ் ‘ஆர்.என்.ஏ.’ என்ற ஒற்றை நியூக்ளியஸ் அமிலத்தை மட்டுமே கொண்ட முழுமையடையாத வைரஸ் கிருமியாகும். இந்த வைரஸ் கொண்டை ஊசி போன்ற முட்களை கொண்ட ஒரு ‘எஸ்’ புரதம் மற்றும் உருண்டையான உடலுடன் வைரசின் மரபணுவில் காணப்படும் ‘என்’ புரதம் என்ற இரு வகை புரதங்களால் ஆகியுள்ளது.
இந்த வைரஸ் மனிதர்களை தாக்கும் போது தனது கொண்டை ஊசி போன்ற ‘எஸ்’ புரதத்தை கொண்டு மனித உடலின் சுவாச மண்டல உயிரணுக்களை தாக்குகிறது. அப்போது, மனித உடலின் டி.என்.ஏ. மரபணுவுடன் ஒரு இணைப்பை ஏற்படுத்தி பல ஆயிரக்கணக்கில் பிரிகிறது. மனித உடலில் வைரஸ் பன்மடங்காக பிரிந்து உருவாகும் போது மனித உடல் நோய்வாய்ப்படுகிறது. அப்போது, பாதிப்படைந்த நபருக்கு மூச்சுக்குழாய் அழற்சி ஏற்பட்டு காய்ச்சல், இருமல், முச்சுத்திணறல் போன்ற அறிகுறிகள் உருவாகிறது. மேலும், முற்றிய நிலையில் சிறுநீரக செயல் இழப்பு, மாரடைப்பும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பவர்களுக்கு கொரோனா வைரஸ் தாக்குதல் வீரியமாக இருக்கும்.
எனவே ஆய்வுக்கூடத்தில் கபசுர குடிநீரை ஆய்வு செய்த போது, அதில் தாவர வேதிப்பொருட்களான குக்கூர்பைட்டாசின், கார்டியோ பாலிலோய்டு, அபிஜெனின், பைரித்ரின் உள்பட 10 வகையான பைட்டோ கலவைகள் காணப்பட்டன. எனவே, இந்த ஆய்வுகளின் அடிப்படையில் பார்க்கும் போது கபசுர குடிநீர் கொரோனா வைரஸ் கிருமிக்கு எதிராக நோய் தடுப்பு சக்தியை உருவாக்கும் ஆற்றல் வாய்ந்தது என்பதை அறிகிறோம்.
அரசு இதனை உறுதி செய்ய தகுந்த மருத்துவ நிபுணர்கள், சித்த மருத்துவர்கள், ஆய்வுக்கூட விஞ்ஞானிகள் சேர்ந்த கூட்டுக் குழுவை அமைத்து கபசுர குடிநீரை மக்களுக்கு வழங்கி, தொடர் மருத்துவ ஆய்வுகளை மேற்கொள்வதன் மூலம் உறுதி செய்யலாம். அதன் மூலம் உலக நாடுகளில் எங்கும் கொரோனாவுக்கு எதிரான தடுப்பு மருந்தை இந்தியாவில் இருந்து தயாரிக்க முடியும்.
அமெரிக்க மக்களுக்கு ஏ.சி.இ.-2 என்ற நோய் எதிர்ப்பு படலம் வலுவற்றதாக இருப்பதால் அவர்கள் எளிதில் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள். இந்திய மக்கள் நீண்ட நெடுங்காலமாக ஏதோ ஒரு வகையில் மூலிகை மருந்துகளை பயன்படுத்துவதால் உடலின் நோய் எதிர்ப்பு கூறுகள் வலுவாக காணப்படுகிறது. இதனால், இங்கு நோய் பரவல் குறைவாக இருக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.