இப்போது உள்ளதைவிட மிகவும் சிக்கனமான எல்.இ.டி., விளக்குகளை உருவாக்க முடியுமா… பிலிப்ஸ் நிறுவனம், துபாய் அரசு, மாநகராட்சியுடன் சேர்ந்து செய்த ஆராய்ச்சியில், அதி சிக்கனமான புதிய எல்.இ.டி., விளக்குகள் உருவாக்கப்பட்டுள்ளன.
சமீபத்தில், துபாயில் நடந்த, ‘நீர், சக்தி, தொழில்நுட்பம் மற்றும் சுற்றுச்சூழல் கண்காட்சி’யில் இந்த புதுமை விளக்குகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ‘துபாய் விளக்கு’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த எல்.இ.டி., விளக்குகள், குண்டு விளக்குகளை விட, 90 சதவீதம் குறைவான மின்சாரத்தை பயன்படுத்தி பிரகாசமாக எரிகின்றன.
அதுமட்டுமல்ல, இவற்றின் ஆயுளும், 15 மடங்கு அதிகம்.துபாய் நகரின் மின் நுகர்வை, 2030ம் ஆண்டுக்குள், 30சதவீதம் குறைக்க வேண்டும் என்றும், நகரின் வளர்ச்சி சுற்றுச்சூழலுக்கு இணக்கமானதாக இருக்க வேண்டும் என்றும் அந்நாட்டு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
அதன் ஒரு பகுதிதான், ‘துபாய் விளக்கு’ திட்டம். துபாய் மாநகராட்சியுடன் பிலிப்ஸ் உருவாக்கிய விளக்குகள், ஒரு, ‘வாட்’ மின்சாரத்திற்கு, 200 லுாமென் அளவுக்கு பிரகாசத்துடன் எரியும் என்பது எல்.இ.டி., விளக்குகள் உலகில் ஒரு புதிய சாதனை தான். ஏனெனில், பிலிப்ஸ் ஏற்கனவே உருவாக்கிய சிக்கனமான எல்.இ.டி., விளக்குகள் வாட்டுக்கு, 101 லுாமென் பிரகாசத்தையே தருகின்றன. துபாய் திட்டத்தின், ‘கூல் டே லைட்’ மற்றும், ‘வார்ம் ஒயிட்’ ஆகிய நிறங்களில் எரியும் மூன்று அளவுகளில் விளக்குகளை பிலிப்ஸ் உருவாக்கியிருக்கிறது.
துபாய் விளக்குகள், 2016 இறுதியில் துபாய் நகருக்கு ஒளியூட்டத் துவங்கும். அடுத்த ஆண்டில், துபாய்க்கு அப்பாலும், பிலிப்ஸ் தன் புதிய எல்.இ.டி.,க்களை அறிமுகப்படுத்தும்.