தமிழ் கட்சிகள் தேர்தல் ஒன்றை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் இருக்கின்றனவா?

சீன வைரஸ் அல்லது வூகான் வைரஸ் தாக்கத்திலிருந்து, நாடு இன்னும் மீளவில்லை. அதற்கான ஆகக் குறைந்த அறிகுறிகள் கூட இதுவரை தென்படவில்லை. ஆனாலும் தேர்தல் ஒன்றை நடத்த வேண்டிய நெருக்கடிநிலை காணப்படுவதும் உண்மைதான். அரசியலைப்பின் படி, நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு மூன்று மாதத்திற்குள் புதிய நாடாளுமன்றம் கூட்டப்பட வேண்டும். அவ்வாறாயின் யூன் மாதம் இரண்டாம் திகதிக்கு முன்பதாக தேர்தலை நடத்த வேண்டும். ஆனால் அதற்கான சூழல் இருப்பதாக தெரியவில்லை. ஆனாலும் கிடைக்கும் தகவல்களின்படி தேர்தலுக்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயப்படுவதாகவே கூறப்படுகின்றது. இந்தப் பின்புலத்தில்தான் நாடாளுமன்றத்தை கூட்டுமாறு கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றார். ஜனாதிபதி கோட்டபாய நாடாளுமன்றம் இன்றி சர்வாதிகார ஆட்சியை முன்னெடுத்து வருவதாகவும் அவர் குற்றம் சாட்டியிருக்கின்றார்.

மக்கள் அச்சத்தில் இருக்கின்றனர். நோய்த் தொற்று கட்டுப்பாட்டுக்குள் இருக்கின்றது என்று மருத்துவ தரப்பினர் கூறினாலும் – இராணுவம் கூறினாலும் – மக்கள் உடனடியாக அதனை ஏற்கப் போவதில்லை. இவ்வாறானதொரு சூழலில் தேர்தலை நடத்தினால் வாக்களிப்பு விகிதம் பெருமளவில் வீழ்சியடையும். குறைவான வாக்களிப்பு என்பது ராஜபக்சேக்களின் ஆட்சியதிகாரத்தை பாதிக்கப் போவதில்லை. பிரதான எதிர்க்கட்சியான ஜக்கிய தேசியக் கட்சி இரண்டாக உடைந்திருக்கும் நிலையில் ராஜபக்சேக்களுக்கு தேர்தலை நடத்துவதில் பெரியளவில் சங்கடங்கள் இல்லை. ஆனால் தமிழ் கட்சிகளின் நிலைமை அப்படியான ஒன்றல்ல. முக்கியமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் அதனை எதிர்த்து போட்டியிடும் ஏனைய பிரதான தமிழ் கட்சிகளுக்கு மூச்சுவிடுவதற்கும், தங்களை தயார்படுத்துவதற்கும் கால அவகாசம் தேவைப்படுகின்றது. நாடாளுமன்றத்தை கூட்டுமாறு சுமந்திரன் கேட்பதற்கு பின்னாலுள்ள பிரதான காரணமும் இதுதான்.

Genaral-Election-2020-logo

ஏனெனில் தற்போதுள்ள நிலையில் மே மாதம் தேர்தல் இடம்பெறுமானால், வடக்கு கிழக்கில் தமிழ் மக்களின் வாக்களிப்பு பெருமளவில் வீழ்ச்சியடையும் குறைவான வாக்களிப்பு இடம்பெறுமானால் அது கூட்டமைப்பை அதிகம் பாதிக்கக் கூடும். குறிப்பாக ராஜபக்சேக்களின் அணியுடன் இணைந்திருக்கும் தமிழ் கட்சிகளின் கை ஓங்கவும் வாய்ப்புண்டு. அதே வேளை ஏற்கனவே கூட்டமைப்பின் அதிருப்தி வாக்குகளை இலக்கு வைத்திருக்கும் விக்கினேஸ்வரன் மற்றும் கஜேந்திரகுமார் தரப்பினரினால் ஏற்படக் கூடிய சவால்களுக்கும் இம்முறை கூட்டமைப்பு முகம் கொடுக்க வேண்டியிருக்கின்றது. வாக்களிப்பு குறைவாக இருக்குமாயின் வடக்கில் இம்முறை கூட்டமைப்பு எதிர்பாராத பின்னடைவுகளை சந்திக்கக் கூடும். கிழக்கில் குறிப்பாக, மட்டக்களப்பிலும் அதற்கான வாய்ப்புக்கள் இருக்கின்றன.

ஒரு நெருக்கடி நிலையின் போதுதான் மக்களுக்கும் அரசியல் தலைமைக்கும் இடையில், அதிகமான நெருக்கம் ஏற்படுவதுண்டு. ஏனெனில் நெருக்கடி நிலையின் போதுதான் மக்களுக்கு தலைமைத்துவம் தேவைப்படுகின்றது. வைரஸ் தொற்றின் தாக்கத்தினால் தமிழ் மக்கள் குறிப்பாக ஏழை மக்கள் நிர்கதியாகிருக்கும் நிலையில் அவர்களை பொருளாதார ரீதியில் கைகொடுக்கக் கூடிய முன் கூட்டிய திட்டங்களுடன் தலைமைகள் என்போர் இருந்தனரா? பொதுவாகவே தமிழ்த் தேசிய கட்சிகள் என்போர் எவரிடமும் ஒரு பொருளாதார திட்டம் எப்போதுமே இருந்ததில்லை. மக்கள் முற்றிலும் எதிர்பாராத நெருக்கடிகளை சந்திக்கும் போது, தலைமைகள் என்போரும் மக்களைப் போன்று செய்வதறியாது தடுமாறுகின்றனர். நெருக்கடிகளின் போது மக்களுக்கும், அவர்களது தலைமைகளுக்கும் இடையில் பெரியளவில் வேறுபாடுகளை காண முடியவில்லை.

தமிழ் அரசியலை, கடந்த பத்து வருடங்களாக கூட்டமைப்பே கட்டுப்படுத்தி வருகின்றது. இந்தக் காலத்தில் கூட்டமைப்பிற்கு பல்வேறு வாய்ப்புக்கள் கிடைத்தன. 2009இற்கு பின்னரான சூழலில் அரசியல் தீர்வு விடயத்தில் பின்னடைவுகளை எதிர்கொண்டிருந்தாலும் கூட, வடக்கு கிழக்கிற்கான ஒரு பொருளாதார திட்டத்தை கூட்டமைப்பு வகுத்திருக்கலாம். ஒரு தன்னார்வ பொருளாதார நிதியத்தை உருவாக்கியிருக்கலாம். குறிப்பாக 2015இற்கு பின்னரான அரசியல் சூழலில் அதற்கான வாய்ப்புக்கள் மிகவும் பிரகாசமாகவே இருந்தன. ஆனால் கூட்டமைப்பால் ஆகக் குறைந்தது இது தொடர்பில் சிந்திக்கக் கூட முடியவில்லை. தமிழ் மக்களுக்கென ஒரு பொருளாதார நிதியம் இருக்குமானால், இவ்வாறான நெருக்கடிகளின் போது, கையேந்தும் சமூகமாக தமிழ் மக்கள் இருக்க வேண்டியதில்லை. இனியாவது தமிழ் தலைமைகள் என்போர் இது தொடர்பில் சிந்திப்பார்களா?

இன்றைய சூழலில் சாதாரண மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பில் எவ்விதமான ஆர்வமும் இருப்பதாக தெரியவில்லை. ஒவ்வொருவரும் மற்றவர்களிலிருந்து விலகியிருப்பதால் மக்கள் என்ன நினைக்கின்றனர் என்பதை அறிந்து கொள்ளவும் முடியாது ஆனால் நிச்சயமாக அவர்கள் மனதை இப்போது, கொரோனா என்னும் சொல் மட்டுமே ஆக்கிரமித்திருக்கின்றது. இவ்வாறானதொரு நிலையில் தேர்தல் தொடர்பில் மக்கள் எவ்வாறு சிந்திப்பார்கள் என்பது ஒரு மிகப் பெரிய கேள்விதான். ஆனாலும் கொரோனாவை வெற்றிகரமாக முறியடித்திருக்கின்றோம் என்னும் புதிய சுலோகத்துடன் சிங்கள மக்கள் மத்தியில், ராஜபக்சேக்களால் செல்ல முடியும். ஒரு வேளை அது சிங்கள மக்கள் மத்தியில் தேர்தல் தொடர்பான ஆர்வத்தை அதிரிக்கவும் கூடும். ஆனால் தமிழ்ச் சூழலில் இயங்கும் எந்தவொரு கட்சியும் அவ்வாறு நிமிர்ந்து மக்களை எதிர்கொள்ளக் கூடிய நிலையில் இல்லை. இதன் காரணமாகத்தான் தேர்தலுக்கான அவகாசம் இவர்களுக்கு தேவைப்படுகின்றது.

Tamil Political Parties

இன்றைய நிலையில், சுமந்திரனை தவிர, வேறு எவருமே நாடாளுமன்றத்தை கூட்டுமாறு தொடர்ச்சியாக வலியுறுத்தவில்லை. பிரதான அரசியல் எதிரணியினரான, ரணில் விக்கிரமசிங்கவோ அல்லது ரஜித் பிரேமதாசவோ ஜனாதிபதியின் செயற்பாடுகளை விமர்சிக்கவில்லை. கோட்டபாய, சர்வாதிகார ஆட்சியை நோக்கி நகர்வதாகவும் அவர்கள் குற்றம்சாட்டவில்லை. அவர்கள் மிகவும் அவதானத்துடன் நடந்து கொள்வதாகவே தெரிகின்றது. ஏனெனில் மக்கள் கொரோனா அச்சத்திலிருக்கும் சூழலில், அதற்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் ஜனாதிபதியை விமர்சித்தால், அது சிங்கள மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்திவிடலாம் என்னும் ஒரு வகை எச்சரிக்கையுடன்தான் நிலைமைகளை கையாள முற்படுகின்றனர். உண்மையும் அதுதான். ஏனைய நாடுகளுடன் ஒப்பிட்டால், கொரோனா விவகாரத்தை எதிர்கொண்டதில் இலங்கை முன்னேற்றகரமாக இருக்கின்றது – என்னும் அப்பிராயம் சிங்கள மக்கள் மததியில் இருக்கின்றது. சிங்கள மக்கள் மத்தியில் மட்டுமல்ல தமிழ் மத்தியதரவர்க்க பிரிவினர் மத்தியிலும் அப்படியான அபிப்பிராயங்கள் காணப்படுகின்றன. ஆனாலும் ஜனாதிபதி தேர்தலி;ன் போது, கோட்டபாயவிற்கு எதிராக பெரும்பாண்மையான தமிழ் மக்கள் வாக்களித்தால், கோட்டபாயவிற்கு எதிரான நிலைப்பாட்டை பேணிப் பாதுகாப்பதன் மூலம், தமிழ் மக்கள் மத்தியில் கூட்டமைப்பிற்கான செல்வாக்கை தக்க வைக்கலாம் என்பது சுமந்திரனின் கணிப்பாக இருக்கலாம்.

கொரோனா விவகாரத்தின் பின்னர் கூட்டமைப்பு என்பது பெருமளவிற்கு காணமால் போன ஒரு கட்சியாகவே இருந்தது. சம்பந்தன் இல்கையில்தானா இருக்கின்றார் என்று சந்தேகப்படுமளவிற்கு, ஒரு மயான அமைதி நிலவியது. இந்த நிலையில்தான், நாங்கள் காணாமல் போகவில்லை- நாங்களும் இங்குதான் இருக்கின்றோம், என்பதை சொல்லும் வகையில் சுமந்திரன் அவ்வப்போது வீட்டில் இருந்தவாறு அப்பிராயங்களை கூறிக் கொண்டிருந்தார். தமிழ் மக்கள் எதிர்கொண்டுள்ள நெருக்கடி, அதற்கான வேலைத்திட்டம் தொடர்பில் எதனையும் கூற முடியாத நிலையில்தான் நாடாளுமன்றத்தை கூட்டுங்கள் என்னும் புதிய கோசமொன்றை கையில் எடுத்திருக்கின்றார். சுமந்திரனின் உண்மையான இலக்கு நாடாளுமன்றத்தை கூட்டுவதன் மூலம் தேர்தலை ஒத்திப்போடுவதுதான். ஏனெனில் தேர்தல் இடம்பெறுமாக இருந்தால், அது கூட்டமைப்பிற்கு பின்னடைவை ஏற்படுத்திவிடும் என்பதை சுமந்திரன் சரியாகவே கணிக்கின்றார். அதற்காக நாடாளுமன்றத்தை கூட்ட வேண்டும் என்னும் சுமந்திரனின் கோரிக்கையும் தவறான ஒன்றல்ல. ஜனநாயக அடிப்படையில் சிந்தித்தால் அது சரியான கோரிக்கைதான்.

யதீந்திரா