யுவன் இசையில் தனுஷ்

செல்வராகவன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ‘நெஞ்சம் மறப்பதில்லை’ படத்துக்காக யுவன் இசையில் பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் தனுஷ்.

‘கான்’ படம் ஒத்திவைக்கப்பட்டதைத் தொடர்ந்து எஸ்.ஜே.சூர்யா நடிக்க ‘நெஞ்சம் மறப்பதில்லை’ என்ற படத்தை தொடங்கினார் இயக்குநர் செல்வராகவன். ரெஜினா, நந்திதா உள்ளிட்ட பலர் நடிக்க கெளதம் மேனன் மற்றும் மதன் தயாரித்து வருகிறார்கள்.

ஈ.சி.ஆர் சாலையில் உள்ள பங்களாவில் இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்பட்டன. செல்வராகவன் இயக்கத்தில் உருவாகி வரும் முதல் பேய் படம் இது.

முழுப்படப்பிடிப்பும் முடிந்து இறுதிகட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இப்படத்துக்காக நீண்ட நாட்கள் கழித்து செல்வராகவன் – யுவன் கூட்டணி அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்துக்காக பாடல் ஒன்றைப் பாடியிருக்கிறார் தனுஷ். இப்பாடல் பதிவு சமீபத்தில் நடைபெற்றது.

செல்வராகவன் – யுவன் – தனுஷ் மூவரும் ஒரு பாடலுக்காக இணைந்திருப்பது இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை உண்டாக்கி இருக்கிறது.