ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்தின் 80 சதவீத ஸ்டாஃப்கள் சூப்பர் மார்க்கெட் வேலைக்கு செல்லும் நிலையை கொரோனா ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் அனைத்தும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. மீண்டும் சகஜ நிலை உருவாகி கிரிக்கெட் போட்டி எப்போது தொடங்கும் என்று கணிக்க முடியாத நிலை உள்ளது.
இதனால் ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் போர்டும் மிகக்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளன. ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டு, ஸ்டாஃப்களின் சம்பளத்தை குறைத்ததுடன் 80 சதவீதம் பேரை கட்டாய விடுப்பில் அனுப்பிவிட்டது.
இதனால் ஸ்டாஃப்கள் வேலை இல்லாமல் தவிக்கும் நிலை உள்ளது. தற்போது ஆஸ்திரேலியாவில் மக்களின் அத்தியாவசிய தேவையை பூர்த்தி செய்யும் வகையில் மருந்து கடைகள், மருத்துவமனைகள், சூப்பர் மார்க்கெட்டுகள் போன்றவை மட்டுமே திறந்து இருக்கின்றன.
இதனால் வேலை இழந்துள்ள ஸ்டாஃப்களுக்கு சூப்பர் மார்க்கெட்டில் ஜூலை 30-ந்திகதி வரை வேலைப்பார்க்கும் வகையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் ஏற்பாடு செய்து வருகிறது.
இதுதொடர்பாக வூல்வொர்த்ஸ் என்ற சூப்பர் மார்க்கெட் நிறுவனத்திற்கு ஆஸ்திரேலிய கிரிக்கெட்டின் சிஇஓ கடிதம் எழுதியுள்ளார். அதில் ‘‘உங்கள் நிறுவனத்திற்கு இதுபோன்ற நிலையில் அதிக அளவிலான ஆட்கள் வேலைக்கு தேவைப்படும். எங்களுடைய ஸ்டாஃப்கள் மற்றும் கலாசார குழு ஏற்கனவே இதுபோன்று தேவைப்படும் நிலையில் மற்ற அமைப்புகளுக்காக தற்காலிகமாக வேலை பார்த்துள்ளனர்’’ என்று குறிப்பிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலிய அரசு செப்டம்பர் 30-ந்தேதி வரை நாட்டின் எல்லையை மூடியுள்ளது குறிப்பிடத்தக்கது.