6 லட்சம் மக்கள் வசிக்கும் யாழ்ப்பாணத்தில் 360 க்கும் மேற்பட்டோருக்கு மட்டுமே கொரோனா பரிசோதனையினை மேற்கொண்டு விட்டு யாழில் சமூகத்தொற்று ஏற்படவில்லை என யாரும் கூறிவிட முடியாது என அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் வட மாகாண இணைப்பாளர் கலாநிதி த. காண்டீபன் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் அவர் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
யாழ்ப்பாணத்தில் சமூக மட்டத்தில் தொற்று ஏற்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வந்த மதபோதகரினாலேயேயே கொரோனா தொற்று ஏற்பட்டதாகவும் கொரோனா தொடர்பில் பொது மக்கள் அச்சமடையத் தேவையில்லை என வடக்கு சுகாதார அதிகாரிகளினால் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் இந்த கருத்தினை ஏற்றுக் கொள்ள முடியாது. உதாரணமாக நான் ஒன்றைக் கூற விரும்புகின்றேன். கடந்த வாரம் கொழும்பில் இடம்பெற்ற சம்பவங்கள் நமக்கு ஒரு படிப்பினையாக உள்ளன. கொழும்பில் நேற்று ,நேற்று முன்தினம் ஏற்பட்டுள்ள தொற்றுகள் அனைத்தும் நோய் அறிகுறி இல்லாது ஏற்பட்ட தொற்றாகவே நாம் பார்க்கின்றோம்.
யாழ்ப்பாணத்தை பொறுத்தவரைக்கும் இன்றுவரை 360 பேர் வரை கொரோனா பரிசோதனையை மேற்கொண்டுள்ளோம். இந்தப் பரிசோதனையானது மூன்று நான்கு மடங்காக அதிகரிக்கப்படும் வரை யாரும் யாழ்ப்பாணத்தில் சமூகத்தொற்று இன்னும் ஏற்படவில்லை என்பதை கூற முடியாது.
எனவே நாங்கள் வடக்கிலுள்ள சுகாதார திணைக்களத்தினரிடம் கோரிக்கை முன்வைக்க விரும்புகின்றோம்.
யாழ்ப்பாணத்திற்கு வெளிநாட்டில் இருந்து வந்த மதபோதகருடன் தொடர்பு பட்ட நபர்களுக்கே கொரோனாபரிசோதனையை இன்றுவரை மேற்கொண்டுள்ளோம்.
ஒரு தடவை அல்லது இரண்டு தடவைகள் பரிசோதனையை மேற்கொண்டு விட்டு ; நாம் சமூகத்தொற்று இல்லை என்று கூறிவிட முடியாது. எனினும் யாழ்ப்பாணத்தை பொருத்தவரைக்கும் வெளிநாட்டில் இருந்து வருகை தந்துள்ளவர்கள் நிறையவே உள்ளார்கள்.
அவர்கள் தொடர்பில் நாம் அதிக அக்கறை செலுத்த வேண்டியதாக உள்ளது.எனவே வடக்கில் கொரோனாபரிசோதனையை இரண்டு மூன்று மடங்காக அதிகரித்து அந்த பரிசோதனை முடிவின் பின்னரே நாம் சமூகத்தொற்று உள்ளதா இல்லையா என்பதை பரிசீலிக்க முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
Eelamurasu Australia Online News Portal