சீனா, உலகம் முழுவதும் முக கவசம், பாதுகாப்பு கவசம், கையுறை ஆகியவற்றை வாங்கி பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பனை செய்வதாக வெள்ளை மாளிகை அதிகாரி குற்றம் சாட்டியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி அலுவலகமான வெள்ளை மாளிகையின் வர்த்தகம் மற்றும் உற்பத்தி பிரிவு இயக்குனர் பீட்டர் நவரோ நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அவர் கூறியதாவது:-
கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், சீனா, உலகம் முழுவதும் முக கவசம், பாதுகாப்பு கவசம், கையுறை ஆகியவற்றை வாங்கி குவித்தது. தேவையை விட 18 மடங்கு அதிகமாக வாங்கியது. முக கவசம் மட்டும் 200 கோடி எண்ணிக்கையில் கொள்முதல் செய்தது. இதற்கு சீன சுங்கத்துறையிடம் இருந்து எனக்கு ஆதாரம் கிடைத்துள்ளது.
இந்த பொருட்களை சீனா பதுக்கி வைத்ததால், இந்தியா, பிரேசில் போன்ற நாடுகள் இவை கிடைக்காமல் தவிக்கின்றன. பதுக்கியதுடன், இந்த பொருட்களை சீனா அதிக விலைக்கு விற்க தொடங்கி உள்ளது. இதுகுறித்து விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.