பிரபல பாப் பாடகி லேடி காகா, கொரோனா நிவாரணத்துக்காக ஆன்லைனில் இசை நிகழ்ச்சி நடத்தி ரூ.980 கோடி நிதி திரட்டியுள்ளார்.
கொரோனா வைரஸ் உலகையே அலற வைத்து வருகிறது. தினமும் ஆயிரக்கணக்கானோர் பலியாகிறார்கள். அனைத்து நாடுகளும் ஊரடங்கை பிறப்பித்து மக்களை வீட்டுக்குள் முடக்கி வைத்துள்ளன. இதனால் ஏழைகளும் ஆதரவற்றோரும் வருமானம் இழந்து தவிக்கிறார்கள். அவர்களுக்கு உதவ நடிகர்-நடிகைகள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் நிதி திரட்டி வருகின்றனர்.
இந்த நிலையில் ஹாலிவுட் பிரபலங்கள் ‘ஒன் வேல்டு’ என்ற பெயரில் ஆன்லைனில் இசை நிகழ்ச்சியை நடத்தி கொரோனா நிதி திரட்டி உள்ளனர். லேடி காகா, ஸ்டீவி வொண்டர், பால் மெக்கார்ட்னி, எல்டன் ஜான் போன்றோர் வீட்டிலிருந்தபடியே இந்த இசை நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்கள்.
இந்த நிகழ்ச்சியில் இந்தி நடிகர் ஷாருக்கான், நடிகை பிரியங்கா சோப்ரா ஆகியோரும் கலந்து கொண்டனர். கொரோனா நிவாரணத்துக்கு உலக சுகாதார நிறுவனத்துடன் இணைந்து லேடி காகா நடத்திய இந்த இசை நிகழ்ச்சி மூலம் ரூ. 980 கோடி நிதி திரட்டப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவத்துறை ஊழியர்களின் நலனுக்காக இந்த நிதி திரட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.