கிரிக்கெட் போட்டிகள் நடைபெறாமல் இருப்பதால் ஆஸ்திரேலிய வீரர்கள் சம்பளத்தை இழக்க வாய்ப்புள்ளதாக முன்னாள் வீரர் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கிரிக்கெட் போட்டிகள் கடந்த மாதத்தில் இருந்து நடைபெறாமல் உள்ளது. ஆஸ்திரேலிய அரசு ஆறுமாத காலத்திற்கு சர்வதேச எல்லையை மூடியுள்ளது. ஆனால் ஜூன் மாதத்திற்குப் பிறகு கிரிக்கெட் போட்டிகள் நடைபெற வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.
கிரிக்கெட் நடைபெறாமல் இருப்பதால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு மிகப்பெரிய அளவில் இழப்பை சந்தித்துள்ளது. இதனால் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டில் வேலை செய்யும் ஸ்டாஃப்களுக்கு ஜூன் மாதம் வரை சம்பளத்தில் பெருமளவு பிடித்தம் செய்யப்படுவதாக தெரிவித்துள்ளது. 80 சதவீதம் பிடித்தம் செய்யப்பட்டு 20 சதவீதம் மட்டுமே சம்பளம் கொடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இந்நிலையில் வீரர்களுக்கான சம்பளமும் பிடித்தம் செய்ய வாய்ப்பு உள்ளதாக முன்னாள் வீரர் மார்க் டெய்லர் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து மார்க் டெய்லர் கூறுகையில் ‘‘ஸ்டாஃப்களின் சம்பளம் பிடித்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், வீரர்களின் சம்பளமும் பிடித்தம் செய்ய வாய்ப்புள்ளது. கிரிக்கெட் ஆஸ்திரேலியா, கிரிக்கெட் வீரர்களின் சங்கத்துடன் இதுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கும் என்று நினைக்கிறேன்.
இரண்டு அமைப்புகளும் பேச்சுவார்த்தை நடத்தி சுமுக தீர்வை எட்டப்படும் என்று நம்புகிறேன். ஆறு மாதம் என்பது மிகவும் நீண்ட காலம். கொரோனா தொற்று அதுவரை தொடராது என்று நினைக்கிறேன். ஒருவேளை நீண்ட காலம் தொடர்ந்து அக்டோபர் மாதம் கிரிக்கெட் தொடர்ந்தால், கிரிக்கெட் ஆஸ்திரேலியாவை காப்பாற்ற வீரர்களின் சம்பளம் மிகப்பெரிய அளவில் பிடித்தம் செய்யப்பட வாய்ப்புள்ளது’’ என்றார்.