ஆஸ்திரேலியாவிலிருந்து ஈழ தமிழ் அகதி குடும்பத்தை நாடுகடத்தவது தொடர்பான வழக்கில், அக்குடும்பத்திற்கு ஆதரவாக நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியுள்ளது.
பிரியா, நடேசலிங்கம் ஆகிய இருவரும் இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் கோரிய ஈழ தமிழ் அகதிகள். படகு வழியாக தஞ்சமடைந்த இவர்கள், ஆஸ்திரேலியாவில் சந்தித்துக் கொண்டு திருமணம் செய்து கொண்ட நிலையில், அவர்களுக்கு அங்கு இரு குழந்தைகளும் பிறந்தன.
இவர்கள் ஆஸ்திரேலியாவில் பாதுகாப்பு விசா கோரி நிலையில், அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு கடந்த 2 ஆண்டுகளாக சிறைப்படுத்தப்பட்டுள்ளனர். இவர்களது நாடுகடத்தல் தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்த நிலையில், இக்குடும்பத்தின் இரண்டாவது குழந்தை தருணிகாவின பாதுகாப்பு விசா விண்ணப்பம் தொடர்பாக நியாயமாக முடிவு எடுக்கப்படவில்லை என நீதிமன்றம் கண்டறிந்துள்ளது.
தற்போதைய தீர்ப்பின் மூலம் இக்குடும்பம் இலங்கைக்கு நாடுகடத்தப்படுவது தொடர்ந்து நிறுத்தி வைக்கப்படுகிறது. அதே சமயம், ஆஸ்திரேலிய அரசுக்கு எதிரான இக்குடும்பத்தின் சட்டப் போராட்டம் தொடரும் எனக் கூறப்பட்டுள்ளது.
கடந்த ஆண்டு மே மாதம், தருணிகாவின் விசா விண்ணப்பத்தை பரிசீலிப்பதற்கு இருந்த தடையை ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை அமைச்சர் டேவிட் கோலிமன் நீக்கிய போதிலும் விண்ணப்பம் தொடர்பான எம்முடிவும் எடுக்கவில்லை.
பின்னர், விசா விண்ணப்பத்தை மதிப்பீடு செய்த ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை, இக்குடும்பத்தை ஆஸ்திரேலியாவின் பாதுகாப்பு விசாவின் கீழ் அனுமதிப்பது சாத்தியமில்லை எனக் கூறியது.
இக்குடும்பம் நாடுகடத்தப்படுவது தொடர்பான வழக்கில் முக்கிய விவகாரமாக இச்சிக்கல் உருவெடுத்திருந்தது. இந்த நிலையில், “ஆகஸ்ட் 2019ல் விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டது தொடர்பாக விண்ணப்பத்தாரருக்கு தெரியப்படுத்தவில்லை, மதிப்பீடு தொடர்பாகவும் கருத்துக் கேட்க அழைக்கவில்லை,” என நீதிபதி மார்க் மோஸின்ஸ்கை குறிப்பிட்டிருக்கிறார்.
அதே சமயம், வழக்கு முடிவடையும் வரை தமிழ் அகதி குடும்பம் கிறிஸ்துமஸ் தீவிலேயே வைக்கப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இக்குடும்பம் உறுப்பினர்களில் 3 பேரின் பாதுகாப்பு விசா விண்ணப்பங்கள் ஏற்கனவே நிராகரிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது குழந்தையான தருணிகாவின் பாதுகாப்பு விசா விண்ணப்பத்தின் முடிவைப் பொறுத்தே இக்குடும்பத்தின் ஆஸ்திரேலிய எதிர்காலம் உள்ளது.