சீனாவின் வூகான் மாகாணத்தில் பரவ ஆரம்பித்த கொரோனா வைரஸ் உலகின் பல நாடுகளிலும் பரவி பாரிய மனித அழிவினை ஏற்படுத்தி வருகின்றது. இந்த வைரஸானது சீனாவின் பிரதான நகரங்களில் ஒன்றான வூகான் நகரத்தில் உள்ள சந்தை பகுதிகளில் காட்டு விலங்குகள் மற்றும் பறவைகள் விற்பனை செய்து அதனை அந்நாட்டு மக்கள் உணவுப்பொருட்களாக பயன்படுத்துவதன் மூலம் பரவியிருக்கலாம் என சந்தேகம் வெளியிடப்பட்டு வருகிறது.
மேலும் சீனாவின் வூகான் நகரில் உள்ள மருத்துவ ஆய்வு கூடங்களில் இருந்து, சீனாவின் தலையீட்டுடன் குறித்த வைரஸ் பரவியிருப்பதற்கான வாய்ப்புகள் காணப்படுவதாக அமெரிக்கா, பிரான்ஸ், இந்தியா உள்ளிட்ட சில நாடுகள் சந்தேகம் வெளியிட்டுள்ளன.
அத்துடன் இந்த வைரஸ் பரவலை உலகம் பூராகவும் பரவவிடாமல் தடுக்கும் நடவடிக்கைகளில் சீனா தவறிவிட்டதாகவும் அவை குற்றம் சாட்டியுள்ளன.
வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களை சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், சீனாவின் தலையீட்டுடன் குறித்த வைரஸ் பரவியிருந்தால் அந்நாடு பாரிய நெருக்கடிகளை சந்திக்க நேரிடும் என எச்சரித்திருந்தார்.
இந்நிலையில் கொரோனா தொடர்பிலான விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்படவேண்டும் என அவுஸ்ரேலியா கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அவுஸ்ரேலிய வெளிவிவகார அமைச்சர், கொரோனா வைரஸ் பரவல் தொடர்பான விசாரணைகளில் சீனாவின் வெளிப்படைத் தன்மை குறித்து தான் மிகவும் அவதானத்துடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
இதேவேளை கொரோனா காரணமாக அவுஸ்ரேலியாவில் இதுவரை 6,586 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் இதுவரை 70 பேர் உயிரிழந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
Eelamurasu Australia Online News Portal