கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்கு எதிர்வரும் 27ஆம் திகதி காலை 5 மணிவரை ஊரடங்கு உத்தரவு நீடிக்கப்பட்டுள்ளது.
மக்களின் வாழ்க்கையை இயல்பு நிலைக்கு கொண்டு வரும் நோக்கில் ஊரடங்கு சட்டத்தை இன்று (20) முதல் கட்டம் கட்டமாக தளர்த்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இதற்கமைய, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களை தவிர்ந்த ஏனைய 18 மாவட்டங்களுக்கு இன்றைய தினம் (20) ஊரடங்கு உத்தரவு தளர்த்தப்பட்டுள்ளது.
இந்த மாவட்டங்களில் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 8 மணி முதல் மறு நாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்திருந்தது.
அத்துடன், கொழும்பு, கம்பஹா,களுத்துறை , புத்தளம், கண்டி, கேகாலை, அம்பாறை ஆகிய மாவட்டங்களின் 25 பொலிஸ் பிரிவுகளைத் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நாளை மறுதினம் (22) ஊரடங்கு உத்தரவை தளத்துவதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.
எனினும், அதில் தற்போது மாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு சட்டம் தொடர்பில் ஏற்கனவே விடுக்கப்பட்டிருந்த அறிக்கையில் திருத்தம் மேற்கொண்டு ஜனாதிபதி ஊடகப் பிரிவு இன்று (20) புதிய அறிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
இதற்கமைய கொழும்பு , கம்பஹா , களுத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களில் தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை காலை 5 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளது.
ஏனைய மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை வரை தினமும் இரவு எட்டு மணி முதல் மறுநாள் அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்படும்.
அத்தோடு இந்த மாவட்டங்களில் ஏப்ரல் மாதம் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை இரவு 8 மணிக்குப் பிறப்பிக்கப்படவுள்ள ஊரடங்கு சட்டம் ஏப்ரல் மாதம் 27 ஆம் திகித திங்கட்கிழமை அதிகாலை 5 மணி வரை நடைமுறையில் இருக்கும்.
ஏப்ரல் மாதம் 25 ஆம் திகதி சனிக்கிழமையும் 26 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் ஊரடங்கு சட்டம் தொடர்ந்தும் நாடளாவிய ரீதியில் அமுலில் இருக்கும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.
கொழும்பு ,கம்பஹா, களுத்தறை மற்றும் புத்தளம் ஆகிய மாவட்டங்களுக்குள் பிரவேசிக்கவும் குறித்த மாவட்டங்களிலிருந்து வெளியேறவும் முற்றாக தடை விதிக்கப்பட்டுள்ளது.