கொரோனா அச்சுறுத்தலுக்கு இடையில், ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள ஓர் ஹோட்டலில் சிறைவைக்கப்பட்டிருக்கும் அகதிகளை விடுவிக்கக்கோரி, கார் ஊர்வலப போராட்டம் நடத்தியதற்காக போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சுமார் 50,000 ஆஸ்திரேலிய டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்திற்கு தூண்டியதாக போராட்ட ஒருங்கிணைப்பாளர் மீது வழக்குப் பதிவுச் செய்திருக்கிறது ஆஸ்திரேலிய காவல்துறை.
ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயன்ற சுமார் 1000த்திற்கும் மேற்பட்ட அகதிகள் சுமார் 7 ஆண்டுகளாக பல்வேறு முகாம்களில் சிறைவைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு வைக்கப்பட்டுள்ள அகதிகளை விடுவிக்கக் கோரியே இப்போராட்டம் நடைபெற்றுள்ளது.
போராட்டத்திற்கு முன்னதாக, போராட்டம் நடந்தால் Refugee Action Collective அமைப்பிற்கு 20,000 டாலர்கள் அபராதமும் சட்டத்தை மீறியதற்காக தனிநபர்களுக்கு 1,652 டாலர்கள் அபராதமும் விதிக்கப்படும் என ஒருங்கிணைப்பாளர்களை காவல்துறை எச்சரித்து இருக்கின்றது. ஆனால், இப்போராட்டம் முக்கியமானது எனக் கருதிய போராட்டக்கார்கள் கார் ஊர்வலப் போராட்டத்தை நடத்தியிருக்கின்றனர்.
இதைத் தொடர்ந்து ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநில காவல்துறை, போராட்டத்தில் பங்கேற்றவர்களுக்கு சுமார் 50,000 டாலர்கள் அபராதம் விதித்துள்ளது.
இந்த நிலையில், ஆஸ்திரேலிய காவல்துறை புதிய வகையில் அபராதம் விதித்திருப்பது அகதிகள் செயல்பாட்டாளர்களை மிரட்டும் செயல் என்ற விமர்சனம் முன்வைக்கப்பட்டுள்ளது. சில்லறை வணிகத்தில் இருப்பவர்களும் கட்டுமானத்தில் ஈடுபடும் தொழிலாளர்களும் பணியாற்றி வருகின்ற பொழுது, சமூக அக்கறைமிக்க வகையில் (ஒரு காரில் இரு போராட்டக்காரர்கள்) நடந்த போராட்டத்திற்கு ஏன் தடை எனப் புரிந்து கொள்ள முடியவில்லை எனத் தெரிவித்திருக்கின்றனர் அகதிகள் செயல்பாட்டாளர்கள்.
அகதிகள் மெல்பேர்ன் நகரில் மட்டுமின்றி, பிரிஸ்பேன் நகரில் உள்ள ஹோட்டலிலும் சிறைவைக்கப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைய முயற்சித்த இந்த அகதிகள், பல ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவின் கடல் கடந்த தடுப்பு முகாம்களில் சிறைவைக்கப்பட்டிருந்த நிலையில் மருத்துவ சிகிச்சைக்காக ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லப்பட்டவர்களாவர்.
இந்த அகதிகளை விடுவிக்க வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வரும் நிலையில், கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் உள்ள இச்சூழலில் அகதிகளின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.