மெல்பேர்ன்- 65 தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றும் ஆபத்து!

ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன் நகரில் உள்ள மந்த்ரா ஹோட்டலில் 65 தஞ்சக்கோரிக்கையாளர்கள் சிறைவைக்கப்பட்டுள்ள நிலையில், அவர்கள் எளிதில் கொரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்படக் கூடிய ஆபத்து உள்ளதாக அச்சம் எழுந்துள்ளது.

ஆஸ்திரேலியாவில் படகு மூலம் தஞ்சமடைய முயன்ற இந்த அகதிகள், பல ஆண்டுகளாக மனுஸ் தீவு தடுப்பு முகாமில் சிறைவைக்கப்பட்டிருந்தனர். கடல் கடந்த தடுப்பு முகாமிலிருந்த இவர்கள், உடல்நலன் பாதிக்கப்பட்ட சூழலில் ஆஸ்திரேலியாவுக்கு மருத்துவ சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் ஹோட்டலில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

“ஒரு நாளில் 23 மணிநேரம் எனது அறையில் தான் இருக்கிறேன். வெளியில் செல்லவே பயமாக இருக்கிறது. ஏனெனில் பகலில் சுமார் 30 அதிகாரிகளும் இரவில் 30 அதிகாரிகளும் பணியாற்றுகின்றனர். அவர்கள் வெளியே சென்றுவிட்டு உள்ளே வருகிறார்கள். உள்ளே வருவதற்கு முன், அவர்கள் சோதிக்கப்படுவதில்லை,” எனக் கூறுகிறார் முஸ்தபா அசிமிடபர் எனும் அகதி. இவர் 2013ம் ஆண்டு ஈரானின் குர்து பகுதியிலிருந்து வெளியேறி இந்தோனேசியா வழியாக ஆஸ்திரேலியாவில் படகு மூலம் தஞ்சமடைந்தவர். முன்னதாக, மனுஸ்தீவில் சிறைவைக்கப்பட்டிருந்த இவர் டிசம்பர் 2019 முதல் தடுப்பிற்கான மாற்று இடமாக செயல்படும் மந்த்ரா ஹோட்டலில் சிறை வைக்கப்பட்டுள்ளார்.

ஆறு மாடிகள் கொண்ட இந்த ஹோட்டலில் ஒரு மாடி முழுவதும் அகதிகள்/ தஞ்சக்கோரிக்கையாளர்கள் உள்ளதாகவும் மற்ற அனைத்திலும் வழக்கமான விருந்தனர்கள் வந்து செல்வதாகவும் கூறப்படுகின்றது. இதனால் எந்நேரமும் ஹோட்டலுக்குள் வைரஸ் பரவக்கூடிய ஆபத்து உள்ளதாக அஞ்சப்படுகின்றது.

“எனக்கு ஆஸ்துமா இருக்கிறது. ஒருவேளை எனக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டால், நான் இறந்து விடுவேன் என நினைக்கிறேன்,” என அஞ்சுகிறார் முஸ்தபா.

“குடிவரவு தடுப்பு மையங்கள் போன்ற மிகவும் நெருக்கமான இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றுவது சாத்தியமற்றது,” என்கிறார் தொற்று நோய்களுக்கான ஆஸ்திரலேசியா (Australasia) சங்கத்தின் தலைவர் பேராசிரியர் ஜோஸ் டேவிஸ்.

அதிகாரிகளை பரிசோதிப்பது என ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை எடுத்துள்ள நடவடிக்கைகளைப் புரிந்து கொள்ள முடிகிறது. ஆனால் இவ்வாறான சோதனை, அறிகுறிகள் இருக்கும் பட்சத்திலேயே பின்பற்றப்படுகிறது எனக் கூறும் பேராசிரியர் டேவிஸ், தடுப்பில் உள்ளவர்களை விடுவித்து சமூகத்தில் தங்கவைப்பதே இதற்கு சிறந்த தீர்வாக இருக்க முடியும் என்கிறார். ஏற்கனவே இதுபோன்ற நடவடிக்கை துருக்கியிலும் ஈரானிலும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்திரேலிய அரசைப் பொறுத்தமட்டில், இதுதொடர்பாக ஐ.நா உள்பட அனைத்து அமைப்புகள் வைத்த கருத்துகளையும் நிராகரித்திருக்கிறது.

“பணயக்கைதி போல் பூட்டிவைக்கப்பட்டிருக்கிறோம்,” என அகதியான முஸ்தபா குறிப்பிடுவது போன்ற நிலையில் 1,400 தஞ்சக்கோரிக்கையாளர்கள்/ அகதிகள் எவ்வித தீர்வுமின்றி ஆஸ்திரேலியாவில் சிறைவைக்கப்பட்டிருக்கிறார்கள்.