சீனாவில் கொரோனா வைரசால் இறந்தவர்களின் பட்டியலில் கூடுதலாக 1290 பேர் சேர்க்கப்பட்ட நிலையில், நேற்று புதிதாக யாரும் உயிரிழக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் கொரோனா வைரஸ் 210 நாடுகளுக்கு பரவி 1.5 லட்சம் உயிர்களை காவு வாங்கி உள்ளது. சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இந்த வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. வுகான் நகரில் அதிக அளவு உயிரிழப்பு ஏற்பட்டது.
வைரஸ் பரவத் தொடங்கியது முதல் ஊரடங்கு உள்பட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்ட சீன அரசு வைரஸ் பரவும் வேகம் மற்றும் பலி எண்ணிக்கையை வெகுவாக குறைத்தது.
குறிப்பாக பிப்ரவரி மாதத்திற்கு பின் அந்நாட்டில் வைரசுக்கு உயிரிழப்போரின் எண்ணிக்கை வெகுவாக குறைந்து வந்தது. மேலும், கடந்த சில நாட்களாக வைரஸ் தாக்குதலுக்கு எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை என்ற நிலைக்கு வந்தது. இதனால் நிம்மதி அடைந்த சீன அரசு ஹூபேய் மாகாணத்தில் ஊரடங்கை தளர்த்தில் போக்குவரத்துக்கு அனுமதி அளித்தது. கொரோனாவை கட்டுப்படுத்திவிட்டதாகவும் அரசு கூறி வந்தது.
நேற்று முன்தினம் நிலவரப்படி மொத்த உயிரிழப்பு 3342 என்ற அளவில் இருந்தது. புதிய நோய்த்தொற்றும் வெகுவாக குறைந்திருப்பதாக அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கொரோனா உயிரிழப்பு தொடர்பான திருத்தப்பட்ட புள்ளிவிவரத்தை நேற்று வெளியிடப்பட்டது. அதில், வுகான் நகரில் உயிரிழப்பு ஏற்கனவே இருந்ததைவிட 50 சதவீதம் உயர்ந்திருப்பதாக கூறியிருந்தது அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தது.
வுகான் நகரில் ஊரடங்கு காலத்தின்போது மருத்துவமனைக்கு வெளியே இறந்தவர்கள் மற்றும் வீடுகளில் தனிமைப்படுத்தலின்போது இறந்தவர்களின் பெயர்கள் விடுபட்டதாகவும், அந்த வகையில் வுகான் நகரில் இறந்தவர்களின் பட்டியலில் மேலும் 1290 பேர் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. இதன்மூலம் நாடு முழுவதும் மொத்தம் 4632 பேர் பலியாகியிருப்பதாக தெரிவிக்கப்பட்டது.
இதன்மூலம் வைரஸ் விவகாரத்தில் உண்மையாக உயிரிழந்தோரின் எண்ணிக்கையை சீனா மறைக்கிறதோ? என்ற கருத்துக்கள் எழுந்தன.
இந்நிலையில், சீனாவில் நேற்று கொரோனாவால் புதிய உயிரிழப்பு ஏற்படவில்லை என்றும், புதிதாக 27 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டதாகவும் தேசிய சுகாதார ஆணையம் கூறி உள்ளது. புதிய நோயாளிகளில் 17 பேர் வெளிநாடுகளுக்கு சென்று வந்தவர்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
‘சீனாவில் இதுவரை மொத்தம் 82 ஆயிரத்து 719 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. புதிதாக பரிசோதனை செய்யப்பட்டு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில், 54 பேருக்கு எந்த அறிகுறியும் இல்லை. இவ்வாறு நோய் அறிகுறிகள் இல்லாமல் மொத்தம் 1017 பேர் மருத்துவ கண்காணிப்பில் உள்ளனர்’ என்றும் தேசிய சுகாதார ஆணையம் கூறியிருக்கிறது.
Eelamurasu Australia Online News Portal