ஆஸ்திரேலியாவில் கொரோனா எதிரொலி காரணமாக அறிவிக்கப்பட்டுள்ள அந்நாட்டு தொழிலாளர்களுக்கு அவசரகால நிதியுதவி வழங்கப்படுகின்றது. ஆனால், இந்த அவசரகால நிதியுதவியில் தற்காலிக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தவிர்க்கப்பட்டிருப்பது பெரும் அச்சத்தையும் வாழ்வாதார சிக்கலையும் ஏற்படுத்தியுள்ளது.
ஆஸ்திரேலியாவின் 482 எனும் தற்காலிக விசா விதிப்படி, பற்றாக்குறையின் அடிப்படையில் திறன்வாய்ந்த தொழிலாளர்கள் ஆஸ்திரேலியாவுக்குள் அனுமதிக்கப்படுகின்றனர். இவர்கள் இந்த விசாவின் கீழ், அதிகபட்சம் நான்கு ஆண்டுகள் வரை ஆஸ்திரேலியாவில் பணியாற்ற அனுமதிக்கப்படுகிறார்கள்.
அந்த வகையில் இவ்விசா மூலம், தத்ரா எனும் ஹோட்டலினால் ஸ்பான்சர் செய்யப்பட்டு ஆஸ்திரேலியா சென்ற 6 வெளிநாட்டுத் தொழிலாளர்கள், தற்போது அந்த ஹோட்டல் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதால் நிச்சயமற்ற நிலையில் அங்கு வாழ்ந்து வருகின்றனர். ஹோட்டலின் முதலாளி கிளிப் வேலிஸ் கொஞ்சம் பண உதவி செய்திருப்பினும் இது நிலையானதாகக் கருதப்படவில்லை.
இதுபோன்ற தொழிலாளர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உதவும் வகையில் தற்காலிக நிதியை திரட்டிவரும் சமூக வழக்கறிஞர்கள் அமைப்பின் தலைவர் மைக் ப்ரோசனன், “ஆஸ்திரேலியாவில் தற்காலிக விசாவில் சிக்கியுள்ள உள்ள ஆயிரக்கணக்கான தொழிலாளர்களுக்கு எவ்வித பொருளாதார ஏற்பாடும் செய்யப்படவில்லை. நாம் அவர்களை ஆஸ்திரேலியாவுக்கு வரவேற்று இருக்கிறோம். அவர்கள் வரி செலுத்துகிறார்கள்” என்கிறார்.
இன்றைய நிலையில், ஆஸ்திரேலியாவில் 482 விசாவின் கீழ் சுமார் 140,000 வெளிநாட்டுத் தொழிலாளர்கள் இருப்பதாகக் கூறப்படுகின்றது.
“ஒரு ஸ்பான்சராக ஆண்டுக்கு ஒரு வெளிநாட்டுத் தொழிலாளருக்கு 1200 டாலர்கள் அரசுக்கு(Skilling Australia Fund) செலுத்துகிறோம். தங்களை பார்த்துக் கொள்ள தொழிலாளியை அதிலிருந்து நிச்சயம் நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் அந்த பணம் எங்கு போகிறது என்று யாருக்குமே தெரியவில்லை,” என்கிறார் தத்ரா ஹோட்டலின் முதலாளியான வேலிஸ்.
“எதார்த்தம் என்னவென்றால், தற்போதைய நிலைமை மாறும் பொழுது இத்தொழிலாளர்கள் இல்லை என்றால் ஹோட்டலை மீண்டும் திறக்க முடியாது,” என எச்சரிக்கிறார் வேலிஸ்.
தற்போது நிலவிவரும் கொரோனா வைரஸ் தொற்று அச்சம் காரணமாக, உலகின் மற்ற நாடுகளைப் போல ஆஸ்திரேலியாவும் பெரிதும் இயங்காமல் உள்ள சூழலில் தற்காலிக விசாவில் உள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்கள், அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்கள் தினந்தினம் வாழ்வாதாரப் போராட்டத்தை சந்திக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.