கடந்த 2014-ம் ஆண்டு பந்து தாக்கியதில் மரணம் அடைந்த அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ் மரணம் குறித்த சாட்சி விசாரணையில் ஹியூக்ஸ் குடும்பத்தினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.
அவுஸ்ரேலிய கிரிக்கெட் வீரர் பிலிப் ஹியூக்ஸ், கடந்த 2014-ம் ஆண்டு நவம்பர் மாதம் சிட்னி மைதானத்தில் முதல்தர கிரிக்கெட்டில் விளையாடிய போது பந்து தாக்கியதில் மரணம் அடைந்தார்.
தெற்கு ஆஸ்திரேலிய அணிக்காக களம் இறங்கிய போது, நியூ சவுத் வேல்ஸ் வேகப்பந்து வீச்சாளர் சீன் அப்போட் வீசிய பயங்கரமான பவுன்சர் பந்து அவரை ஒரேயடியாக சாய்த்து விட்டது. இதையடுத்து நியூ சவுத்வேல்ஸ் மாகாணத்துக்கான இறப்பு குறித்து விசாரிக்கும் தனி அதிகாரி மைக்கேல் பார்ன்ஸ் அது குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.
இதில் ஹியூக்ஸ் எதிரணி பவுலர்கள் கோபப்படும் வகையில் சீண்டியதும், உன்னை கொன்று விடுகிறேன் என்று இன்னொரு பவுலர் போலிஞ்சர் அவரை திட்டியதும் தெரிய வந்தது. அதன் தொடர்ச்சியாக நிறைய பவுன்சர்கள் வீசப்பட்டதில் ஒரு பந்து ஹியூக்சின் உயிரை குடித்து விட்டது.
ஆனால் சாட்சியம் விசாரணையின் போது பெரும்பாலான வீரர்கள் சம்பவத்தன்று நடந்தது என்ன? என்பது ஞாபகம் இல்லை என்று தங்களது வாக்குமூலத்தில் தெரிவித்தனர். இதனால் அதிருப்திக்குள்ளான ஹியூக்சின் குடும்பத்தினர் நேற்றைய (14)கடைசி நாள் சாட்சி விசாரணையின் போது, பாதியில் வெளியேறினர். மைக்கேல் பார்ன்சின் விசாரணை அறிக்கை வருகிற 4-ந்திகதி வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.