தனிமைப்படுத்தல் முகாமில் நோய்த் தொற்று ஏற்படாது தடுக்க வேண்டியது அந்த முகாமுக்குப் பொறுப்பான இராணுவ அதிகாரி, அப்பகுதி பிராந்திய சுகாதார வைத்திய அதிகாரி மற்றும் தனிப்படுத்தப்பட்டிருப்பவர்கள் அனைவரினதும் கூட்டுப் பொறுப்பாகும் என்று யாழ். போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார்.
யாழ். போதனா வைத்திய சாலையில் இன்று (16) மதியம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேலும்,
பலாலி தனிமைப்படுத்தல் முகாமில் இருந்தவர்களுக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பதனை உறுதியாகக் கூறமுடியாது. குறிப்பாக இவர்களுக்கு தொற்று ஏற்பட்டது மதபோதகரினால் ஏற்பட்ட தொற்று, சங்கிலித் தொடராக இவர்களுக்கும் தொற்றியிருக்கலாம். ஆனாலும் தனிமைப்படுத்தியதால் ஒருவரிடம் இருந்து ஒருவருக்கு வந்தது என தெளிவாகக் கூறமுடியாது.
தனிமைப்படுத்தப்பட்டவர்கள் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும். மற்றவர்களுக்கு இடையில் இடைவெளியை பேணியிருக்க வேண்டும். கைகளை சவர்க்காரம் இட்டு நன்கு கழுவி வந்திருக்க வேண்டும். ஆகவே அது ஒரு கூட்டு பொறுப்பாகும்.
இந்தக் கூட்டுப் பொறுப்பில் எங்கே பிழை நடந்தது என என்னால் தற்போது தெளிவாக கூறமுடியாது. ஆனாலும் இது தொடர்பாக சுகாதார அமைச்சு, மாகாண சேவைப் பணிப்பாளருக்கு தெளிவாகக் கூறியுள்ளேன். அது தொடர்பாக ஓரிரு நாளில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்படவுள்ளது.
அதன்மூலம் தனிமைப்படுத்தல் முகாமில் ஏதேனும் குறைப்பாடுகள் இருந்தால் அதனை நிவர்த்திசெய்ய நடவடிக்கைகளை முன்னெடுப்பார்கள் – என்றார்.