அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டைஹினின் கண்டுபிடிப்பு

அவுஸ்ரேலியாவைச் சேர்ந்த ஆண்ட்ரூ டைஹின், உருளைக் கிழங்குகளில் இருந்து பாலாடைக்கட்டியை உருவாக்கியிருக்கிறார். பொட்டேடோ மேஜிக் கம்பெனியின் நிறுவனரான ஆண்ட்ரூ டைஹின், 12 ஆண்டுகள் ஆராய்ச்சியின் முடிவில் இந்தக் கண்டுபிடிப்பை நிகழ்த்தியிருக்கிறார். “சீஸ், பொட்டேடோவை இணைத்து சாட்டோ என்று பெயரிட்டிருக்கிறேன். பாலாடைக்கட்டியைப் போலவே இருக்கும், உருகவும் செய்யும். இதில் வேறு எந்த ரசாயனங்களும் சேர்க்கவில்லை. உருளைக்கிழங்கை ஒரு குறிப்பிட்ட விதத்தில் பயன்படுத்தி, சாட்டோவை உருவாக்கியிருக்கிறோம்.

பாலாடைக் கட்டியில் என்னென்ன செய்ய முடியுமோ அவற்றை எல்லாம் செய்யலாம். சாட்டோவை வைத்து பாலாடைக்கட்டியாகவும் பாலாகவும் பயன்படுத்தலாம். ஐஸ்க்ரீம்களில் சேர்க்கலாம். உருளைக்கிழங்கு சுவையில்தான் இருக்கும். விரைவில் சாட்டோ, உணவுத் தொழிற்சாலைகளில் மிகப் பெரிய மாற்றத்தைக் கொண்டு வர இருக்கிறது.

மெல்பர்னில் ஒருவர் ‘லிக்விட் பொட்டேடோ’ தயாரிப்பில் இறங்கியிருக்கிறார். விலங்குகளில் இருந்து கிடைக்கும் உணவுப் பொருட்களுக்கு மாற்றாக, விவசாயப் பொருட்களைப் பயன்பாட்டுக்குக் கொண்டு வருவதே எங்களின் லட்சியம்” என்கிறார் ஆண்ட்ரூ டைஹின்.