மெக்சிகோ நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா என்ற உயிர்க்கொல்லி வைரஸ் உலகையே உலுக்கி வருகிறது. 200-க்கும் அதிகமான நாடுகள் கொரோனா வைரசின் கோரப் பிடியில் சிக்கி, மீள முடியாமல் திணறி வருகின்றன. உலகம் முழுவதும் இந்த கொடிய வைரசால் ஏற்படும் உயிரிழப்புகள் மற்றும் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நிமிடத்துக்கு நிமிடம் எகிறி வருகிறது.
உலகளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் முதல் இடத்தில் அமெரிக்கா உள்ளது. அங்கு கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆயிரத்தை நோக்கி செல்கிறது. அதேபோல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை விரைவில் 6 லட்சத்தை எட்டும் என்கிற சூழல் உள்ளது.
அமெரிக்காவின் அண்டை நாடான மெக்சிகோவும் தீவிரமாக கொரோனா வைரஸ் பாதிப்புக்கு ஆளாகியுள்ளது. அந்த நாட்டில் கொரோனா தாக்கி 300-க்கும் அதிகமானோர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் அந்த நாட்டின் மேற்கு பகுதியில் ஏற்பட்ட பயங்கர காட்டுத்தீயில் சிக்கி பழங்குடியினத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மெக்சிகோவின் மேற்கு மாகாணமான ஒசாகாவில் உள்ள சாண்டோஸ் ரெய்ஸ் டெபெஜிலோ என்ற இடத்தில் அடர்ந்த காடு உள்ளது. இந்த காட்டுக்குள் பழங்குடியினத்தைச் சேர்ந்த மக்கள் பலர் வசித்து வருகின்றனர்.இந்த நிலையில் ஒசாகா மாகாணத்தின் சாண்டியாகோ ஜூக்ஸ்ட்லா ஹூவாக்கா எனும் கிராமத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு திடீரென தீப்பிடித்தது.
காற்றின் வேகம் காரணமாக இந்த தீயானது, சாண்டோஸ் ரெய்ஸ் டெபெஜிலோவில் உள்ள காட்டுப்பகுதிக்கும் பரவியது. வறண்ட வானிலை காரணமாக காட்டுத்தீ வேகமாக பரவியது. பல ஏக்கர் பரப்பளவில் காட்டுத்தீ மளமளவென கொழுந்துவிட்டு எரிந்தது. இதனால் அந்த காட்டுக்குள் வசித்து வந்த பழங்குடியின மக்கள் பலர் தீயில் சிக்கிக்கொண்டனர்.
இதையடுத்து நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள் வரவழைக்கப்பட்டு காட்டுத்தீயை அணைக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டன. அதே போல் காட்டுக்குள் சிக்கியிருக்கும் பழங்குடியின மக்களை மீட்கும் பணியில் ராணுவ வீரர்கள் களம் இறக்கப்பட்டனர்.
தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி 75 சதவீத காட்டுத்தீயை அணைத்தனர். எனினும் இந்த காட்டுத்தீயில் சிக்கி பழங்குடியினத்தை சேர்ந்த 9 பேர் உடல் கருகி உயிரிழந்தனர். சுமார் 300 பேர் மீட்கப்பட்டு பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். காட்டுத்தீயை முழுமையாக கட்டுக்குள் கொண்டுவருவதற்கான முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
Eelamurasu Australia Online News Portal