ஆஸ்திரேலியாவில் கரோனா வைரஸ் தொற்றின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், ஊரடங்கு கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
தற்போதைய சூழலில் ஊரடங்கு கட்டுப்பாட்டைத் தளர்த்த முடியாது என்று ஆஸ்திரேலியா தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவில் கரோனோ தொற்று தீவிரம் தற்போது குறைந்துள்ளது. கரோனா பரவலைத் தடுக்கும் விதமாக மக்கள் கூடுவதற்கும் பயணங்களுக்கும் அந்நாட்டு அரசு கட்டுப்பாடுகள் விதித்தன. இந்நிலையில் கரோனா தொற்று தீவிரம் குறைந்துள்ள நிலையில், அக்கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும் என்று அந்நாட்டு மக்கள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் அவர்களின் கோரிக்கையை ஆஸ்திரேலிய அரசு ஏற்கவில்லை.
இதுகுறித்து ஆஸ்திரேலியப் பிரமதர் ஸ்காட் மோரிசன் கூறுகையில், ”கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் சூழலை நாம் அடைவதற்கு இன்னும் பல வாரங்கள் இருக்கின்றன. தற்போதைய சூழலில் மிகுந்த பொறுமை அவசியம். சிங்கப்பூர், தென்கொரியா போன்ற நாடுகள் அங்கு கரோனா தொற்று எண்ணிக்கை குறைந்ததும் ஊரடங்கு கட்டுப்பாட்டைத் தளர்த்தின. ஆனால் அதன் பிறகு மீண்டும் கரோனா தொற்று ஏற்படத் தொடங்கியது. எனவே, முழுமையான அளவில் கரோனா பாதிப்பு நீங்கும் வரையில் ஊரடங்கு கட்டுப்பாட்டைத் தொடர்வது அவசியம்” என்று தெரிவித்தார்.
கடந்த இரு தினங்களில் ஆஸ்திரேலியாவில் புதிதாக 63 நபர்களுக்கு மட்டுமே கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஆஸ்திரேலியாவில் 2.5 கோடி மக்கள்தொகையில் 6,400 நபர்களுக்கு கரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. அதில் 3,598 பேர் குணமாகியுள்ளனர். 61 பேர் உயிரிழந்துள்ளனர்.