சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பணிமனைக்குட்பட்ட 12 பேரிடம் நேற்று மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் கொரோனா தொற்று ஏற்படவில்லை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த தகவலை வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் வெளியிட்டுள்ளார்;. இது தொடர்பான அறிக்கை கிடைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் அரியாலையில் உள்ள தேவாலயத்தில் கடந்த மார்ச் 15ஆம் திகதி சுவிஸ் போதகர் தலைமையில் நடத்தப்பட்ட ஆராதனையில் பங்கேற்ற யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா உள்ளிட்ட வடக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் தத்தமது வீடுகளில் சுயதனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டனர்.
குறித்த சந்தேகத்துக்குரியவர்களது சுயதனிமைப்படுத்தல் காலம் நிறைவடையும் நிலையில் அவர்களது மாதிரிகள் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றன.
இந்தநிலையில் நேற்று யாழ்ப்பாணம் சாவகச்சேரி சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுக்குட்பட 12 பேரின் மாதிரிகள் பெறப்பட்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடத்தில் பரிசோதனைக்கு உட்;படுத்தப்பட்டன.
குறித்த 12 பேருக்கும் கொரோனா வைரஸ் தொற்று ஏற்படவில்லை என அறிக்கை கிடைத்துள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
Eelamurasu Australia Online News Portal