முடக்கப்பட்ட தாராபுர கிராமம் விடுவிக்கப்பட்டுள்ளது!

மன்னார் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள தாராபுரம் கிராமம் கடந்த 8 ஆம் திகதி அதிகாலை முதல் முழுமையாக முடக்கப்பட்ட நிலையில் குறித்த கிராமம் நேற்று திங்கட்கிழமைமாலை 3 மணியளவில் விடுவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 18 ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்தில் இடம்பெற்ற மரணச் சடங்கு ஒன்றில் கலந்துகொண்டு விட்டு புத்தளத்திற்குச் சென்ற ஒருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

குறித்த நபர் கடந்த 15 ஆம் திகதி இந்தோனேசியாவில் இருந்து இலங்கைக்கு வந்திருந்தார். அதற்கு பின் 18 ஆம் திகதி மன்னார் தாராபுரம் கிராமத்திற்கு வந்து மரணச்சடங்கில் கலந்து கொண்டு பின் மீண்டும் புத்தளத்திற்குச் சென்றுள்ளார்.  இந்த நிலையில் குறித்த நபர் புத்தளத்தில் இரண்டு வாரங்கள் தனிமைப்படுத்தப்பட்டிருந்தார். பின்னர் சமூக ரீதியில் அவருக்கு பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது.

இதன் போது அவர் நோய் தொற்றிற்கு உள்ளாகியுள்ளமை தெரிய வந்துள்ளது. இந்த நிலையில் அவர்கள் உடனடியாக மன்னாரில் உள்ள உறவினர்களுக்கு அறிவித்துள்ளதோடு, பொலிஸாருக்கும் அறிவித்துள்ளனர்.

உடனடியாக மன்னார் பொலிஸார் மற்றும் சுகாதார துறையினரும் குறித்த கிராமத்திற்குச் சென்று தாராபுரம் கிராமத்தில் உள்ள இரண்டு கிராம அலுவலகர் பிரிவுகளையும் ஒரு வாரத்திற்கு முடக்க நடவடிக்கைகள் மேற்கொண்டனர்.

மேலும் குறித்த கிராமத்தில் இரண்டு குடும்பங்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் அவர்களிடம் வைத்திய பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டது. பரிசோதனை முடிவில் அவர்களுக்கு எவ்வித தொற்றும் இல்லை என அறிக்கை வந்துள்ளது

இந்த நிலையில் குறித்த தாராபுரம் கிராமத்தை விடுவிப்பது தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் உரிய அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்றார். இந்த நிலையில் குறித்த கிராமம் நேற்று திங்கட்கிழமை மாலை 3 மணியளவில் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது.

எனினும் மன்னார் மாவட்டத்தில் எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 6 மணிக்கு காவல்துறை ஊரடங்குச் சட்டம் தளர்த்திக்கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.