ஆஸ்திரேலியாவில் அகதிகள் சமமாக நடத்தப்படுகின்றார்களா?

கொரோனா வைரஸ் தாக்கம் பல நாடுகளில் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த தாக்கம் காரணமாக ஆஸ்திரேலியாவில் அகதிகள், தஞ்சக்கோரிக்கையாளர்கள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து கேன்பெராடைமஸ் பத்திரிகையில் தனது கருத்தினை எழுதியிருக்கிறார் ஆஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழகத்தின் அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் துறையின் இணைப் பேராசிரியரான முனைவர் ஜான் மின்ஸ்.

உலகெங்கும் பரவியுள்ள கொரோனா வைரசின் தாக்கத்திலிருந்து தப்புவதற்கு, சமூக இடைவெளியை கடைப்பிடிப்பதே முதன்மையான உத்தரவாக உள்ளது. பிற நாடுகளைப் போல ஆஸ்திரேலியாவிலும் இதே போன்ற உத்தரவே வழங்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ள அகதிகள் மற்றும் தஞ்சக்கோரிக்கையாளர்களுக்கு இந்த புதிய உத்தரவை பின்பற்றுவதற்கான சூழல் இல்லை.

ஆஸ்திரேலியாவில் விசா காலாவதியாகி தங்கியுள்ளவர்கள், விசா விதிகளை மீறியவர்கள், மருத்துவ சிகிச்சைக்காக கடல் கடந்த முகாமிலிருந்து நாட்டுக்குள் கொண்டு வரப்பட்ட அகதிகள், கடல் வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள் என ஆஸ்திரேலியாவின் தடுப்பில் 1380 ஆண்களும் 70 பெண்களும் இருக்கின்றனர். இவர்கள் குடிவரவுத் தடுப்பு முகாம்கள், தடுப்பிற்கு மாற்று இடங்களாக செயல்படும் விடுதிகள், வீடுகள் உள்ளிட்டவற்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

ஆஸ்திரேலியாவில் கடல் வழியாக தஞ்சமடைய முயன்ற அகதிகள் 80 சதவதீமானோர் ஐ.நா.வின் அகதிகள் சாசனத்தின் படி அகதிகளாக அறியப்படுகின்றனர்.

இவ்வாறு 60க்கும் மேற்பட்ட அகதிகள் நவுருத்தீவில உள்ள ஆஸ்திரேலிய தடுப்பு முகாமிலிருந்து மருத்துவ சிகிச்சைகாக ஆஸ்திரேலியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளனர். இவர்கள் மெல்பேர்ன் நகரில் உள்ள ஹோட்டலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், மன அழுத்தம், நிச்சயத்தமையற்ற நிலை மற்றும் நம்பிக்கையின்மையால் ஏற்பட்ட பயம் மற்றும் இன்னும் பிற உடல்நலப் பிரச்னைகளுக்காக சிகிச்சை எடுத்து வருகின்றனர். இத்துடன், கொரோனா பரவல் என்ற புதிய அச்சமும் இவர்களை தொற்றிக் கொண்டுள்ளது.

இந்த பரவலைத் தடுக்கும் விதமாக, வெளியில் உள்ள நண்பர்கள், உறவினர்கள் தடுப்பில் உள்ள அகதிகளை சந்திக்க அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. தடுப்பு முகாம் காவலாளிகளுக்கும் முகாமில் வேலைச் செய்யும் ஊழியர்களுக்கும் முறையான சுகாதார பரிசோதனை நடத்தப்படும் என்றும் ஆஸ்திரேலிய அரசு கூறுகின்றது. ஆஸ்திரேலியா எங்கும் வைரஸ் பரவிவரும் இந்த சூழலில், தங்கள் கவலைகளை கணக்கில் கொள்ளுமாறு அகதிகள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

“சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும்படி ஆஸ்திரேலிய அரசு சொல்கிறது. ஆனால், மிக குறுகிய இடத்தில் உள்ள நாங்கள் எப்படி சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது? ஒரே அறையில் 5 முதல் 6 பேர் உறங்குகிறோம். நாங்கள் எப்படி இடைவெளி கடைப்பிடிப்பது? இங்கு அதற்கு வழியே இல்லை. பார்வையாளர்கள் வருவதை ரத்து செய்து விட்டீர்கள். சரி, நல்லது. ஆனால், தினமும் வெளியில் சென்றும் வரும் பாதுகாப்பு அதிகாரிகளை எப்படி அனுமதிக்கிறீர்கள்? உடல் வெப்பநிலை சொல்லும் கருவியை வாங்குவதைப் பற்றி பேசிக்கொண்டிருக்கிறார்கள். ஆஸ்திரேலிய அரசும் எல்லைப்படையும் எங்களை விடுவிக்க வேண்டும். இங்கு பலர் இதய நோய், நீரழிவு நோய், மூச்ச பிரச்னைகள் உள்ளிட்ட கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இத்தொற்று ஏற்பட்டால் அனைத்தும் முடிந்துவிடும். ஏற்கனவே மன அழுத்தத்திலும் துன்பத்திலும் இருக்கிறோம். எங்களை விடுவியுங்கள்,” என தடுப்பில் உள்ள ஓர் அகதி கேட்கிறார்.

“பொது சுகாதாரத்திற்கு எதிர்வரும் அச்சுறுத்தல்களைத் தடுப்பதற்கும் மருத்துவ பராமரிப்பு தேவைப்படுபவர்கள் அனைவரும் அதைப் பெறுவதை உறுதிசெய்வதும் சர்வதேச மனிதஉரிமைகள் சட்டத்தில் கையெழுத்திட்டுள்ள நாடுகளின் கடமை,” என நினைவூட்டியிருக்கிறார் ஐ.நா. மனித உரிமைகள் ஆணையரான மிச்செல் பேச்லெட். தடுப்பில் உள்ளவர்களுக்கு கொரோனா தொற்று பரவுவதற்கான ஆபத்து உள்ளதாக ஆஸ்திரேலிய சுகாதாரத்துறை குறிப்பிடுகின்றது.

இவர்கள் மட்டுமின்றி, சமூகத்தில் உள்ள தஞ்சக்கோரிக்கையாளர்களும் வறுமையில் உள்பட பல சிக்கல்களை எதிர்கொள்ளும் ஆபத்து இருக்கின்றது. பெருந்தொற்று ஏற்பட்டுள்ள இச்சூழலில் பலர் வேலை இழந்திருக்கின்றனர். இவர்கள் உதவித்தொகை வழங்கப்படும் பட்டியலில் சேர்க்கப்படவில்லை. கொரோனா நெருக்கடி உள்ள இந்த நேரத்தில் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் என்கிறார் ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மாரிசன். ‘அனைவரும்’ என்பதில் நிரந்தர குடியேறிகள் முதல் தற்காலிக குடியேறிகள் வரை சமூகத்தில் இருந்தாலும் சரி தடுப்பில் இருந்தாலும் சரி அவர்கள் அனைவரும் பாதுகாக்கப்பட வேண்டும்.